yதொழில் தொடங்க ஏற்ற மாநிலமா தமிழகம்?: ஸ்டாலின்

Published On:

| By Balaji

அதிமுக ஆட்சியில் தொழில் தொடங்க ஏற்ற மாநிலமாகத் தமிழகம் இல்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜூலை 22-ஆம் தேதி) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் போகிறோம் என்று அறிவித்துள்ள அதிமுகவின் ஆட்சியில் தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சங்களிலும் தமிழகம் கடும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய கவலையளிக்கிறது. ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும், வாய்ப்புகளும் தமிழகத்தில் இருந்தாலும், அதிமுக ஆட்சியால் தொழில் முதலீடு செய்வதற்கோ, தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கோ தமிழகம் ஏற்ற மாநிலமல்ல என்ற அசாதாரணமான சூழல் தற்போது அதிமுக ஆட்சியில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளிவந்துள்ள பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலின் ஆய்வில் தொழில் தொடங்குவதற்குத் தேவையான ஆறு முக்கிய அம்சங்களில் தமிழகம் மற்ற மாநிலங்களுடன் போட்டி போட முடியாத மாநிலமாக மாறி, ஆறாவது இடத்திற்குச் சென்று விட்டது என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆறு அம்சங்களில் மிக முக்கியமான ‘தொழில் தொடங்குவதற்கு ஏற்றச் சூழல் நிலவும் மாநிலம்’ என்ற அம்சத்தில் நாட்டில் உள்ள மாநிலங்களில் 17- ஆவது இடத்திற்குத் தமிழகம் இந்த ஆட்சியில் தள்ளப்பட்டு விட்டது.

ஏற்கனவே தொழில் தொடங்குவதற்கு ஏற்றச் சீர்திருத்தங்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 18-வது இடத்திற்குச் சென்றுவிட்டதாக உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டது. நம் நாட்டிற்குள் வரும் அந்நிய முதலீடுகளில் வெறும் 2.9 சதவீதத்தை மட்டுமே ஈர்க்கும் மாநிலமாகப் பின் தங்கிவிட்டது என்றும் சுட்டிக்காட்டியது. நம் மாநிலம் தொழில் முதலீட்டாளர்களின் நண்பனாக திமுக ஆட்சியில் திகழ்ந்தது. “தொழில் தொடங்குவதற்கு விரைந்து அனுமதி கொடுக்கும் மாநிலமாகவும், அந்த அனுமதி வழங்குவதில் வெளிப்படையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் மாநிலமாகவும்” திமுக ஆட்சியில் தமிழகம் திகழ்ந்தது.

ஆனால், தொழில் தொடங்குவதற்கான அனைத்து அளவுகோலிலும் இன்றைக்குத் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது தற்போதைய ஆட்சி. இந்த சீரழிவிலிருந்து விரைவில் தமிழகத்தை மீட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் ஆற்றலும், நிர்வாக திறமையும் திமுகவுக்கு மட்டுமே உண்டு என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share