இந்தியா தொழில் மற்றும் நிதித்துறையில் பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருவதால் தொழில் செய்ய சிறந்த இடமாக மாறியுள்ளதென மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற ஃபின்டெக் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அருண் ஜேட்லி, “இந்திய நிதித்துறையில் தற்போது டிஜிட்டல் மயமாதல், பணப்பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கட்டாயம், பணமதிப்பழிப்பு போன்ற பல சீர்திருத்த மாற்றங்களை மேற்கொண்டு, பின்னர் ஜி.எஸ்.டியை இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அறிமுகம் செய்தது. தொழில் துறையில் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ள இந்தியா, தொழில் செய்ய சிறந்த இடமாக மாறியுள்ளது. மேலும் உலக வங்கி வெளியிட்டுள்ள சிறந்த தொழில் செய்யும் நாடுகளுக்கான பட்டியலில் 30 இடங்கள் முன்னேறி 100 இடங்களுக்குள் வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தின் மூலம் நாட்டின் நிதித்துறை, வங்கி மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகவும் பணப் பரிவர்த்தனைகள் அதிகமாகியுள்ளன என்று ஜேட்லி சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு நாள் பயணமாகச் சிங்கப்பூர் சென்ற நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அந்நாட்டின் துணைப் பிரதமரான தர்மன் சண்முகரத்னம் மற்றும் நிதியமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் ஆகியோரைச் சந்தித்தார்.�,