k
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவுக்காக ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை அடமானமாக வைத்துக் கொண்டு கடன் வழங்குமாறு வங்கியில் மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் களத்தில் பல சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வகையில் இன்று ஒரு வேட்பாளர் தன் ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை அடகு வைக்க முன் வந்துள்ளார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் தனது தேர்தல் செலவுக்கு போதிய பணம் இல்லாததால், தனது ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை அடமானமாக வைத்து ரூ.50 லட்சம் கடன் வழங்கக் கோரி பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்று கடன் பிரிவு மேலாளரிடம் மனு அளித்துள்ளார். இதற்காக காந்தி வேடமிட்டு கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், “தேர்தல் செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் கடன் வழங்குமாறு வங்கியில் கோரிக்கை வைத்துள்ளேன். தனது மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என கூறினார்.�,