கொரோனாவின் தீவிரம் புரியாமல் மக்கள் வெளியே சென்றுவருவதாக முதல்வர் கவலைத் தெரிவித்தார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதால், அது மூன்றாம் கட்டத்திற்கு நகராமல் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கம் பகுதிகளிலுள்ள அம்மா உணவகங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 1) ஆய்வில் ஈடுபட்டார். இட்லியை சாப்பிட்டுப் பார்த்து உணவின் தரம் மற்றும் ஊழியர்கள் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ததோடு, சாப்பிட வந்தவர்களிடம் கருத்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது. அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது” என்று தெரிவித்தார்.
நோயின் தீவிரம் அறியாமல் பொதுமக்கள் வெளியில் நடமாடுகின்றனர், அரசின் சட்டத்தை பொதுமக்கள் மதிக்க வேண்டுமெனவும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர், “டெல்லி மாநாட்டில் பங்கேற்றோர் விவரங்கள் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன” என்றும் தெரிவித்தார்.
மேலும், “இஎம்ஐ வசூல் என்பது மத்திய அரசின் விவகாரம் என்பதால், மத்திய நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அக்கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துவோம். ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு நீட்டிப்பது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும். அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்கும் உணவகங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முதல்வர் தெரிவித்தார்.
**எழில்**
�,