தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து பாலியல் புகார்கள் அளித்துவந்தாலும் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சியடைந்ததே ஒழிய பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவில்லை. தெலங்கானா அரசும் இந்த விஷயத்தில் தலையிடாமல் இருந்தது. இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையத்தின் நோட்டீஸ் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி அரசு தரப்பையும் திரையுலக தரப்பையும் நகர்த்தியுள்ளது.
திரைப்பட வாய்ப்புகளுக்காக தன் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டார். கடந்த வாரம் அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தினார். ஆனால் தெலுங்கு நடிகர்கள் சங்கம் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசாமல் ஸ்ரீ ரெட்டிக்குத் தடை விதித்தது.
இந்நிலையில் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நான்கு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெலங்கானா தலைமைச் செயலருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைச் செயலருக்கும் நேற்று (ஏப்ரல் 12) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா நடிகர்கள் சங்கம் ஸ்ரீ ரெட்டிக்கு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. மேலும் ஸ்ரீ ரெட்டியின் புகார் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைக்க இருப்பதாக நடிகர்கள் சங்கத் தலைவர் சிவாஜி ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “மூத்த நடிகர்கள், இயக்குநர்கள் இந்தக் குழுவில் இடம்பெறுவர். நடிகை கூறிய சில குற்றச்சாட்டுகள் சில உறுப்பினர்களைக் காயப்படுத்தியதால் அவருக்குத் தடை விதித்தோம். நாங்கள் பெண்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். இதை நீங்கள் எங்களது பெண் உறுப்பினர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். சங்கத்தில் உள்ள 900 உறுப்பினர்களும் ஸ்ரீ ரெட்டியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.�,