திருக்குவளையில் உள்ள தனது தந்தை கலைஞரின் பிறந்த இல்லத்திற்கு இன்று (செப்டம்பர் 3) சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
திருச்சி, முக்கொம்பு கொள்ளிடம் அணையின் உடைந்த பகுதிகளையும் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்புப் பணிகளையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
அணையை ஆய்வு செய்யாமல் தண்ணீரைத் திறந்துவிட்டதே மதகுகள் உடைந்ததற்குக் காரணம் என்றும் இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் அப்போது ஸ்டாலின் தெரிவித்தார்.
பின்னர், திருக்குவளை சென்ற ஸ்டாலின் அங்குள்ள கலைஞரின் பிறந்த இல்லத்திற்குச் சென்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கலைஞரின் பெற்றோர்களான முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மாள் ஆகியோரின் படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக அங்கிருந்த வருகைப் பதிவேட்டில், “தலைவர் அவர்கள் பிறந்த ஊர் திருக்குவளைக்குப் பலமுறை வந்துள்ளேன். தலைவருடனும் வந்திருக்கிறேன். தனியாகவும் வந்திருக்கிறேன். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வந்துள்ளேன். கழகத் தலைவராக வந்திருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டனாக அவர் காட்டிய வழியில் எனது பயணம் தொடர்ந்து தொடரும். வாழ்க கலைஞர்” என எழுதிக் கையொப்பமிட்டார்.
பின்னர் திருக்குவளை பொதுமக்களை அவர் சந்தித்தார். ஏராளமான பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த வீணை, செங்கோல், வாள், புத்தகங்கள் போன்ற பரிசுப் பொருட்களை அவருக்கு வழங்கி, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.�,”