தமிழ் சினிமா 365: பகுதி – 42
**இராமானுஜம்**
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களை நம்பி படத்தைத் தொடங்கிய காலங்களில் சினிமா வியாபாரமும் வசூலும் ஆரோக்கியமாக இருந்தது. விநியோகஸ்தர்கள் ஏரியா அடிப்படையில் கொடுக்கின்ற அட்வான்ஸ் தொகையை முதலீடாகக்கொண்டு படப்பிடிப்புகள் நடைபெறும். விநியோகஸ்தர் கொடுக்கின்ற அட்வான்ஸ் தொகைக்கு வட்டி எதுவும் கொடுக்க வேண்டியதில்லை என்பதால் படத்தின் தயாரிப்பு செலவு அதிகமாவது இல்லை. தயாரிப்பாளருக்குப் பொறுப்புணர்வுடனும் குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வுடனும் செயல்பட்டனர். இதனால் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்துக்கும் நிரந்தரமான விநியோகஸ்தர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட விநியோகஸ்தர்கள் ரிலீஸ் செய்யும் படங்கள் குறிப்பிட்ட தியேட்டர்களில்தான் வெளியாகும் என்கிற சூழல் இருந்தது.
தமிழகம் முழுவதும் அனைத்து ஏரியாக்களிலும் விநியோகஸ்தர்களுக்கு என்று வலிமைமிக்க சங்கங்கள் இருந்தபோதும் அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள், படங்கள் வெளியிடுவதில் இடையூறு செய்வது என்கிற நிலை ஏற்பட்டதில்லை. தொழில்ரீதியாகப் போட்டிகள் இருந்தன. தன்னை மீறி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் செயல்பட்டதில்லை. அதனால்தான் 1985 வரையிலான தமிழ் சினிமாவைப் பொற்காலம் என்று இன்று வரை கூறி வருகின்றனர். அப்போது கேளிக்கை வரி 40% வரை அமலில் இருந்தது. இருந்தாலும் படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பெரிதாக நஷ்டமடைந்து முடங்கியது இல்லை.
அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வந்ததற்குக் காரணம், தியேட்டர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை நம்பிக்கை மிகுந்த சங்கிலித் தொடர் இருந்தது. நஷ்டப்பட்ட தயாரிப்பாளரைக் கைதூக்கிவிட விநியோகஸ்தர், அவருக்கு துணையாகத் திரையரங்கு உரிமையாளர்கள் இருந்தனர். தமிழ் சினிமாவில் இயக்குநர் பாரதிராஜா வருகைக்குப் பின் தயாரிப்பாளர்களுடன் இணைந்த இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் சினிமா தயாரிப்பு இருந்தது. அது மெல்ல மெல்ல கதாநாயகர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடைக்கலமாகி அவர்கள் தயாரிப்பாளர்களைத் தீர்மானிக்கும் சூழல் உருவானபோதுதான் ஃபைனான்சியர்களின் பங்களிப்பு தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்தது.
நடிகர்களை ஒப்பந்தம் செய்ய அட்வான்ஸ் கொடுப்பதற்கே தயாரிப்பாளர்கள் ஃபைனான்சியர்களிடம் கடன் வாங்க தொடங்கியபோது, சினிமா இயல்பாகக் கதாநாயகர்களின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாகச் சென்றது. படப்பிடிப்புச் செலவுக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்குக் கடன் வாங்கிய தயாரிப்பாளர்கள் அதிகரித்தனர். அவர்கள் தயாரிப்பில் வெளியான படங்கள் வெற்றி பெற்றாலும் அதன் முழுமையான லாபத்தை, பலனைத் தயாரிப்பாளர்கள் அனுபவிக்க முடியவில்லை. தமிழ் சினிமாவின் தயாரிப்பு, விநியோக உரிமை வியாபாரம், தியேட்டர்களில் படங்களைத் திரையிடுவதில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
சில சினிமா தயாரிப்பாளர்களின் நேர்மையற்ற நடவடிக்கைகளால் தொழில்முறை சினிமா ஃபைனான்சியர்கள் தாங்கள் கொடுத்துவந்த கடன் வரம்பைக் குறைக்க தொடங்குகின்றனர். விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தயாரிப்புக்கு அட்வான்ஸ் கொடுத்துவந்த தொகை ஃபைனான்ஸ் கடனாக மாறத் தொடங்கியது.
தமிழ்நாடு சினிமா வியாபாரத்துக்காக சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, மதுரை, வடஆற்காடு, தென்னாற்காடு எனப் பிரிக்கப்பட்டு அந்தந்த ஏரியா உரிமைகளை மட்டும் வாங்கி தொழில் செய்துவந்த விநியோகஸ்தர்கள், ஃபைனான்சியர்களாக மாறியபோது தமிழ் சினிமாவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
புதிதாக படம் வாங்க வந்தவர்கள் இவர்களால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு முன்னேறி வருகின்றனர். இந்தப் புதிய குறுநில மன்னர்களைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது சினிமா ஃபைனான்சியர்கள் சங்கம் என்ற குரல் தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள் மத்தியில் ஒலிக்கிறது. குறுநில மன்னர்களுக்கும் – பேரரசர்களுக்குமான வியாபாரப் போட்டிகளை நாளை பார்க்கலாம்.
குறிப்பு : இத்தொடர் சம்பந்தமாகத் தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்
**ஆசிரியர் குறிப்பு**
இராமானுஜம்: கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விவரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான ‘தமிழ்நாடு என்டர்டெயின்மென்ட்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர்.
**முந்தைய பகுதி – [தமிழ் சினிமாவில் தனி ராஜ்ஜியம் நடத்தும் ஃபைனான்சியர்கள்!](https://minnambalam.com/k/2019/02/15/70)**�,