பண மதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் 15 லட்சம் தபால் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்புக்குப் பிறகு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாதவைகளாயின. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறிய மத்திய அரசு, பின்னர் புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டது. இதனால் மதிப்பிழந்த நோட்டுகளை மக்கள் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் செலுத்தினர். மேலும் தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்க அதிக மக்கள் ஆர்வம் காட்டினர்.
தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கும்போது, 50 ரூபாய் டெபாசிட்டில் ஏ.டி.எம். கார்டுகளும், ரூ.500 டெபாசிட்டில் காசோலை புத்தகமும் வழங்கப்படுகின்றன. இந்த ஏ.டி.எம். கார்டுகளைக் கொண்டு எந்த வங்கியில் வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்ற சிறப்பம்சங்களால் தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் சேமிப்புக் கணக்குகளை எளிதில் தொடங்கும்விதமாக சென்னையின் முக்கிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு கணக்குகள் தொடங்கப்படுகின்றன. பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு மட்டுமே தமிழகத்தில் சுமார் 15 லட்சம் தபால் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.�,