மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. முதலில் ஒரு மெசேஜ் வந்து விழுந்தது.
“காதலர் தினத்தன்று இரவு சென்னையில் அதிமுக தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நள்ளிரவு ஒன்றரை வரை பேசிச் சென்றதை அடுத்து இரு கட்சிகளில் இருந்தும் அதிகார பூர்வ அப்டேட் எதுவும் வரவில்லை. நள்ளிரவிலேயே பியூஷ் கோயல் டெல்லிக்குத் திரும்பிச் சென்றவர் பாஜக கட்சித் தலைமையிடம் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. ’ஏற்கனவே தனக்கு நன்கு அறிமுகமான தங்கமணி மற்றும் அதிமுக தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த வைத்திலிங்கம், கேபிமுனுசாமி உள்ளிட்டோரோடு பியூஷ் கோயல் பேசினார். அப்போது பாஜக சார்பில் தங்களுக்கு பத்து தொகுதிகளைக் கேட்டிருக்கிறார்கள். அதுவும் அந்த பத்தில் ராமநாதபுரம், மதுரை, கோவை, திருப்பூர், தென் சென்னை என்று அதிமுக முக்கியமாக கருதும் பல தொகுதிகள் இருந்தன.
ஆனால் தங்கமணியோ கூட்டணியை முடிவு செய்துவிட்டுத்தானே நாம் தொகுதியை முடிவு செய்ய வேண்டும், பாஜக கூட்டணி பற்றி ஏற்கனவே எங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை வீட்டில் வந்து சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோரிடம் தெளிவாக சொல்லியிருக்கிறார். பாஜகவோடு அதிமுக சேர்ந்து தேர்தலை சந்தித்தால் அது வெற்றிகரமாக இருக்காது என்று முதல்வர் நினைக்கிறார். கட்சியின் பல மாவட்டச் செயலாளர்களும் அதையேதான் நினைக்கிறார்கள். அதனால் கூட்டணி என்பதை நாங்கள் இன்னொருமுறை கட்சியினருடன் விரிவாக ஆலோசனை நடத்திவிட்டே சொல்ல வேண்டும், அப்போது கூட பத்து தொகுதி என்பது பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அதிகம். ஐந்து தொகுதிகளை வேண்டுமானால் தரலாம் என்று அதிமுக தரப்பில் கூறியுள்ளனர்.
இதனால்தான் அன்று இரவே டெல்லி திரும்பிவிட்ட பியூஷ் கோயல் தனது தமிழக விசிட் பற்றி கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு சில தகவல்களை முறைப்படி தெரிவித்திருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கிற விஷயங்கள் முக்கியமானவை. ‘அதிமுக இப்போதைய நிலையில் பாஜகவோடு கூட்டணி வைக்கிற மனநிலையில் இல்லை. தேர்தல் நோட்டிபிகேஷன் வரும் வரை நம்முடன் பேசுவது போல போக்கு காட்டிவிட்டு, நோட்டிபிகேஷன் வந்ததும் அதிமுக தலைமையில் பாஜக அல்லாத ஒரு கூட்டணியை அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்று அமித் ஷாவுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார் பியூஷ் கோயல். அதேநேரம் எடப்பாடி அரசின் இரண்டாமாண்டு விழாக்கு மறக்காமல் வாழ்த்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூட்டணிக்காக அதிமுகவை தாஜா செய்துகொண்டிருக்கிறார். இதையடுத்து அதிமுகவைத் தாண்டி தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளோடு டெல்லியில் இருந்து பாஜக சார்பில் தனியாகவும் சில பேச்சுவார்த்தைகள் ஓடிக் கொண்டிருக்கிறது’ என்கிறார்கள்’’ என முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.
இதைப் படித்துவிட்டு ஃபேஸ்புக் தனது தகவலை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.
“பியூஷ் கோயல் சென்னை விசிட்டுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக சீனியர்கள் சிலரோடு விவாதித்திருக்கிறார். அப்போது, ‘பொங்கலுக்கு நாம் அறிவித்த ஆயிரம் ரூபாய் பணம், இப்போது அறிவித்திருக்கிற 2ஆயிரம் ரூபாய் உதவித் தொகை எல்லாம் கிராமங்களில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பாஜகவோடு கூட்டணி வைத்தால் தேவையில்லாத சிக்கலைதான் சந்திக்க நேரும். அதனால் பாஜக அல்லாமல் அதிமுக தலைமையில் தனி அணி அமைப்பதில் மும்முரம் காட்டுவோம். இடையில் ஏதும் நமக்கு மத்திய அரசால் சிக்கல் வந்தால் கூட்டணிக்கு மறுப்பதால்தான் அதிமுகவை பாஜக மிரட்டுகிறது என்று நாமே வெளிப்படையாக சொல்லிவிடலாம்’ என்று அவர்கள் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து அதிமுகவும் சில இஸ்லாமிய கட்சிகளிடம் நாங்கள் பாஜகவோடு போவது இன்னும் நிச்சயமாகவில்லை என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்” என்ற மெசேஜை செண்ட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.
�,”