yசர்தார் படேல் சிலை… சாதனைகளும் சர்ச்சைகளும்

Published On:

| By Balaji

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேல் சிலையை இன்று (அக்டோபர் 31) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி. 5,700 டன் இரும்பு, 3,000 தொழிலாளர்கள் உழைப்பில் உருவாகி சாதனை படைத்திருக்கிறது படேல் சிலை. அதே நேரத்தில் நர்மதா அணை விவகாரம், சர்க்கரை ஆலை விவகாரம், தமிழ் மொழிக்கு அவமரியாதை என அடுத்தடுத்த சர்ச்சைகளிலும் சர்தார் படேல் சிலை விவகாரம் சிக்கியிருக்கிறது.

குஜராத் மாநில முதல்வராக மோடி பதவியில் இருந்தபோது 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்தார் வல்லபபாய் படேல் சிலை உருவாக்கப்படும் என அறிவித்தார். இந்தச் சிலைக்கு 2013ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2014இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

தற்போது சுமார் நான்கு ஆண்டுகள் கட்டுமானத்துக்குப் பின்னர் 182 மீட்டர் உயரம் கொண்ட படேல் சிலை முழுமையடைந்திருக்கிறது.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல இரு மடங்கு உயரமானது சர்தார் வல்லபபாய் படேல் சிலை. இந்தச் சிலை கட்டுமானத்துக்கு 1,80,000 கியூபிக் மீட்டர் சிமென்ட் காங்கிரீட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 5,700 டன் எஃகு, 22,500 வெண்கல தகடுகள் மற்றும் 3,000 தொழிலாளர்களின் உழைப்பில் உருவானதுதான் இந்தப் பிரமாண்ட சர்தார் படேல் சிலை.

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணை அருகே உள்ள சிறிய தீவான சாதுபேட்டில் இச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது. உலகம் வியக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் சர்தார் படேல் சிலையைச் சுற்றிலும் ஏராளமான சர்ச்சைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

**72 கிராமங்களில் துக்க தினம்**

நர்மதா நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணைக் கட்டும் திட்டத்துக்காக 100க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கிராமங்கள் அழிக்கப்பட்டன. இந்தக் கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்குப் பலருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

நர்மதா நடுவர் மன்றத்தின் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னரும் உரிய இழப்பீடு, மாற்றுப் பணி உள்ளிட்டவை எதனையும் செய்யாமல் குஜராத் அரசு புறக்கணித்துவிட்டது என்பது பழங்குடி மக்களின் புகார்.

இதனால் சர்தார் படேல் சிலை திறப்பு விழாவை 72 பழங்குடி கிராமங்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். பொதுவாக பழங்குடி கிராமங்களில் துக்க நாள் எனில் எந்த வீட்டிலும் உணவு சமைக்க மாட்டார்கள்; இதனால் இன்று 72 கிராமங்களிலும் உணவு சமைக்காமல் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாகப் பழங்குடி மக்கள் அறிவித்துள்ளனர்.

**தமிழுக்கு அவமானம்**

இந்தியா விடுதலை அடைந்தபோது 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் சுதந்திர நாடுகளாக இருந்தன. இவற்றை ஒருங்கிணைத்து இந்தியா என்கிற மிகப் பெரிய நிலப்பரப்பையும் நாட்டையும் கட்டமைத்தவர் படேல் என்பதால் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் புகழப்படுகிறார். அவரது சேவையைப் பாராட்டும் வகையில் தற்போது உருவாக்கப்பட்ட சிலைக்கு Statue of Unity- ஒற்றுமையின் சிலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Statue of Unity என்பதை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தும் வைத்துள்ளனர். இதில் தமிழும் அடங்கும். ஆனால் தமிழில் எப்படி மொழி பெயர்த்துள்ளனர் தெரியுமா? “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” என அவதூறாகத் தவறுதலாக மொழியாக்கம் செய்துள்ளனர். தமிழில் ஒற்றுமையின் சிலை என்பதுதான் சரியான பெயர். உலகமே பார்க்கக் கூடிய ஒரு நிகழ்வில் இப்படி கவனக்குறைவாக இருப்பது தமிழர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதுபற்றி தகவல் வெளியான பின் தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் அழித்துள்ளனர்.

**சர்க்கரை ஆலை விவகாரம்**

வல்லபபாய் படேல் சிலை அமைந்திருக்கும் இடத்தைத் தாரை வார்த்தது கொடுத்தது சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே இயங்கி வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்க்கரை ஆலை நிறுவனம். ஆனால், சர்க்கரை ஆலை நட்டத்தில் இயங்கியதால் திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஆலைக்குக் கரும்புகளை அனுப்பிய 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலை வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.12 கோடி நிலுவையில் உள்ள தொகையை வழங்க குஜராத் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அப்பகுதி விவசாயிகளின் குற்றச்சாட்டு.

இதனால் சர்தார் படேல் சிலை திறப்பு விழாவின்போது இந்த விவசாயிகளும் போராட்டத்தில் குதிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

**- மதி**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share