�திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று (நவம்பர் 14) கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி விழா, ஆடி பிரம்மோற்சவம், ஆனி பிரம்மோற்சவம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா, இன்று (நவம்பர் 14) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்குச் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 64 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாரைத் தரிசனம் செய்தனர்.
இன்று முதல் 10 நாட்களுக்கு, காலையிலும் இரவிலும் சாமி மாடவீதி உலா நடைபெறவுள்ளது. வரும் நவம்பர் 23ஆம் தேதியன்று அதிகாலை பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. இதில், பரணி தீபத்திற்கு 2,500 பக்தர்களும், மகா தீபத்தின்போது 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.�,