yகேரள வெள்ளம்: வெற்றியை அர்ப்பணித்த கோலி டீம்!

Published On:

| By Balaji

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவின் வெற்றி நேற்றே உறுதியாகிவிட்ட நிலையில் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் பெரிய ஆரவாரமின்றித் தொடங்கியது. ஆட்டம் தொடங்கி இரண்டு ஓவர்கள் மட்டுமே இங்கிலாந்து அணியால் தாக்குப் பிடிக்க முடிந்தது. அஸ்வின் வீசிய மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆண்டர்சன் 11 ரன்கள் எடுத்து தன் விக்கெட்டை இழந்தார். அத்துடன் ஆட்டமும் முடிவுக்கு வந்தது.

521 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியால் இரண்டாவது இன்னிங்ஸில் 317 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராகப் பதிவு செய்த மிகப்பெரும் வெற்றிகளின் வரிசையில் இந்த வெற்றி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இதற்கு முன்னதாக 1986ஆம் ஆண்டு லீட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 279 ரன்கள் வித்தியாசத்திலும், 2016ஆம் ஆண்டு விசாகபட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 246 ரன்கள் வித்தியாசத்திலும், இந்தியா வெற்றி பெற்றிருந்தது.

இந்தப் போட்டியின் கடைசி விக்கெட் தவிர மற்ற 19 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே கைப்பற்றியது இந்தியாவின் முக்கிய சிறப்பம்சம். முதல் இரண்டு போட்டிகளில் கேப்டன் விராட் கோலியின் பங்களிப்பைத் தவிர மற்ற வீரர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை. ஆனால் இம்முறை அப்படியில்லை. அணியில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தனர்.

கோலியின் 200 ரன்கள் (முதல் இன்னிங்ஸில் 97, இரண்டாவது இன்னிங்ஸில் 103), ரஹானே, புஜாரா ஆகியோரின் அரைசதங்கள், பாண்டியாவின் 5 விக்கெட்டுகள், பும்ராவின் 5 விக்கெட்டுகள், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோரின் 14 கேட்சுகள் என இந்த வெற்றி, அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

இந்த வெற்றியையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி ரோஸ் பவுல் மைதானத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share