Yகேஜிஎஃப் – 2: பூஜையுடன் தொடங்கியது!

Published On:

| By Balaji

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் அண்மையில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. கன்னட திரையுலக வரலாற்றிலேயே அதிக செலவில் இப்படம் உருவாக்கப்பட்டது. இப்படத்திற்கு நாடு முழுவதிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் பாலிவுட்டில் ஷாருக் கான் நடித்த ஜீரோ படத்துடன் மோதியும் பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றி பெற்றது. இப்படத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் நடித்திருந்தார். ராக்கி கதாபாத்திரம் சாதாரண நிலையிலிருந்து கோலார் தங்க வயல் பகுதியில் வல்லமைமிக்க கேங்ஸ்டராக உருவெடுப்பதே இப்படத்தின் கதை. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தைப் போலவே இப்படமும் இரண்டு பாகங்களாக உருவாகவிருந்தது. இந்நிலையில், கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று (மார்ச் 13) பூஜையுடன் தொடங்கியது.

பூஜை நிகழ்வின் படங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே ஃபிலிம்ஸின் ட்விட்டர் பக்கத்தில், “விஜயநகரிலுள்ள கோதண்டராமர் கோயிலில் எங்களது கேஜிஎஃப்-2 படக்குழுவினர் ஆசிர்வாதம் பெற்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பணிகள் தொடங்கிவிட்டன. கேஜிஎஃப் முதல் பாகத்தை நீங்கள் அனைவரும் ரசித்ததை தொடர்ந்து இரண்டாம் அத்தியாயம் கொண்டாட்டத்தை இருமடங்காக்கவுள்ளது. எப்பொழுதும் போல உங்களது அன்பும் ஆசிகளும் வேண்டும்” என்று தெரிவித்தார். இப்படத்தை பிரஷாந்த் நீல் இயக்குகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், வஷிஷ்ட சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share