சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் போன்ற நிறுவனங்கள் தேவைப்படுவதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சில் தலைவருமான அருண் ஜேட்லி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”வேளாண்மை, ஊரக மேம்பாடு, சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் அரசு அதிகக் கவனம் செலுத்தி, அதிகமாகச் செலவிட்டு வருகிறது. ஏழை மக்களுக்கான சுகாதார மேம்பாட்டுக்கான சுகாதார மையங்களையும் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. மேலும், இச்சேவைகளுக்காக மாநில அரசுகளும் அதிகமாகச் செலவிடுகின்றன.
ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு அது சிறப்பாகச் செயல்பட்டு வருவதைப் போல, சுகாதாரம், வேளாண்மை, ஊரக மேம்பாடு ஆகியவற்றுக்காக நிறுவனங்கள் அல்லது சிறப்பு அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் ஏழை மக்கள் மிகவும் பயனடைவார்கள். ஜிஎஸ்டி கவுன்சிலைப் பொறுத்தவரையில் இதுவரையில் 34 கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அவற்றுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தகர்களும் பொதுமக்களும் பயன்பெற்றுள்ளதோடு புதிய இந்தியாவை நோக்கிப் பயணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.�,