Yகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்!

Published On:

| By Balaji

சமையல் என்பது ஒரு கலை

என்னதான் சமையல் திறமையும் அனுபவமும் இருந்தாலும், சில வேளைகளில் ரிசல்ட் எதிர்பார்த்தபடி அமைவதில்லை. சமைக்கும் முறைகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன.

**பனீர் பட்டர் மசாலா**

உதாரணத்துக்கு, “ஹோட்டல் ஸ்டைலில் பனீர் பட்டர் மசாலா செய்ய முயற்சி செய்தேன். யூடியூப் பார்த்து, அவர்கள் சொன்னபடி சரியாகத்தான் செய்தேன். ஆனால், சமைத்து முடித்த அரை மணி நேரத்தில் பனீர் பட்டர் மசாலா பசைபோல மாறிவிட்டது. ருசி என்னவோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால், பசைபோல இருந்ததால் சாப்பிடப் பிடிக்கவில்லை. எந்த இடத்தில் சொதப்பினேன் என்றே தெரியவில்லை…” என்ற சந்தேகத்துக்கான தீர்வு…

பனீர் பட்டர் மசாலா செய்யும்போது நாம் சேர்க்கும் பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, கசகசா, சோள மாவு போன்றவை பசைபோல மாறக்கூடிய தன்மையுடையவை. இவற்றில் ஏதாவது ஒன்றை அதிக அளவில் சேர்த்தோம் என்றால், பனீர் பட்டர் மசாலா பசைபோல மாற வாய்ப்புள்ளது. எனவே, நாம் சேர்க்கும் பொருள்களின் சரியான அளவை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம்.

**கோதுமை பரோட்டா**

அடுத்து, “எங்கு பார்த்தாலும் கோதுமை பரோட்டாவாக இருக்கிறது. வெறும் கோதுமை மாவில் பரோட்டா செய்ய முடியுமா? மைதா மாவு கலந்தால்தான் செய்ய முடியுமென்றால் எந்த விகிதத்தில் சேர்க்க வேண்டும்?” என்கிற கேள்விக்கான பதில்…

கோதுமை பரோட்டா செய்ய மைதா மாவு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பூரி, சப்பாத்திக்குச் செய்வது போல கோதுமை மாவை நன்றாகப் பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு விசிறி மடிப்பு அல்லது புடவை மடிப்பு போல மடித்துக்கொண்டு பரோட்டா செய்யும்போது மைதா பரோட்டா போலவே அடுக்குகளும் வரும்.

**கீரை**

புதிதாகத் திருமணமான பெண்களுக்கு வரும் சந்தேகங்கள் அதிகம். அவற்றில் ஒன்று, “கீரை மற்றும் காய்கறிகளை எப்படிச் சமைப்பது என்பதிலேயே எனக்கு எக்கச்சக்க சந்தேகங்கள் இருக்கின்றன. கீரையை குக்கரில் வேகவைக்கக் கூடாது என்கிறார்கள் சிலர். `கலர் மாறிவிடும்; கீரையில் தெளிக்கப்பட்ட ரசாயனங்கள் ஆவியாகாது’ என இதற்குக் காரணமும் சொல்கிறார்கள். திறந்துவைத்து சமைத்தால் சத்து போய்விடும் என்கிறார்கள் சிலர். காய்கறிகள் சமைப்பதிலும் எனக்கு இதே சந்தேகம்தான். குக்கரில் என்னென்ன சமைக்கலாம், என்னென்ன சமைக்கக் கூடாது? தெளிவாக்குங்களேன்…” என்பார்கள்.

கீரையைத் தண்ணீரில் நன்றாக அலசி கல் உப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு குக்கரில் ஒரு கட்டு கீரைக்கு அரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஒன்று அல்லது இரண்டு விசில் வரும் வரை வைத்து நன்றாக வேகவைத்து எடுத்துக்கொண்டு அதைப் பொரியலாகவோ, கூட்டாகவோ செய்யலாம். இதுபோல அனைத்து வகையான காய்கறிகளையும் குக்கரில் வேக வைக்கலாம். இதனால் சத்துகள் போகும் என்பதெல்லாம் இல்லை. ஒருவேளை காய்கறிகளை வேகவைக்க பயன்படுத்திய நீர் மீதம் இருந்தால், அதையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.

எளிதில் வெந்துவிடும் வாழைக்காய், பறங்கிக்காய், சேனைக்கிழங்கு போன்றவற்றை மட்டும் குக்கரில் வேகவைக்கும்போது அதிக கவனம் தேவை. அதிக நேரம் வேக வைக்கும்போது இவை குழைந்து போக வாய்ப்புள்ளது.

சமையல் என்பதைச் செய்து முடிக்கவேண்டிய வேலை என்றே பலரும் அணுகுகிறார்கள். ஆனால், அது ஓர் அற்புதமான கலை. அந்தக் கலையில் ஆர்வத்துடன் ஈடுபடும்போது, செய்து பரிமாறும் உணவுகள் சுவையில் அசத்துவதுடன், சாப்பிடுபவர்களின் பாராட்டுகளையும் அள்ளித்தரும்.

[நேற்றைய ரெசிப்பி: சாமை வெஜிடபிள் கிச்சடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/08/5)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share