தாய்லாந்து நாட்டினர் கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. உலகிலேயே இதுவரை உருகுவே அரசும் கனடா அரசும் மட்டும்தான் தங்களது நாட்டில் கஞ்சா செடிகளை வளர்க்க சட்ட அனுமதி அளித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் தாய்லாந்து அரசு மருத்துவப் பயன்பாட்டுக்காக மட்டும் கஞ்சாவுக்கு அனுமதி அளித்தது. இந்த நிலையில் தற்போது கடைகளில் விற்கப்படும் இனிப்புப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களிலும் கஞ்சாவை கலந்து விற்க தாய்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.
மருத்துவ நலனைக் கருத்தில்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பொதுவெளியில் கஞ்சா புகைப்பது சட்டப்படி குற்றமாகும், பொதுவெளியில் கஞ்சா புகைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. பொதுவெளியில் கஞ்சா புகைத்தால் 3 மாத சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் நோக்கமும் அரசின் இந்த முடிவுக்கு ஒரு காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனுமதியை தொடர்ந்து தாய்லாந்து பொது சுகாதாரத் துறை அமைச்சர், அந்நாட்டு விவசாயிகளுக்கு இன்று முதல் ஒரு மில்லியன் கஞ்சா நாற்றுகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உத்தரவை அடுத்து தாய்லாந்தில், கஞ்சா வழக்குகளில் இதுவரை கைது செய்யப்பட்ட நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் முதன்முறையாக கஞ்சாவுக்கு சட்ட அனுமதி தந்த முதல் நாடு தாய்லாந்து.
.