ஐநா சபையில் பேசிய மதுரை மாணவி பிரேமலதாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தமிழ்செல்வம் என்பவரின் மகள் பிரேமலதா. இளங்கலை படிப்பு முடித்திருக்கிறார். இவர் இளமனூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தார். பள்ளிக் கல்வியோடு மட்டுமல்லாமல் மனித உரிமை கல்வியையும் பிரேமலதா சேர்த்துப் படித்தார். A Path to Dignity: The Power of Human Rights Education என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டபோது அதில் மனித உரிமை குறித்து பிரேமலதா கருத்து தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ஐநா சபையில் பேச அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பிரேமலதா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் நடித்த கல்வி குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் இந்தியக் கல்வி முறை பற்றி பேசிய அவர் நீட்தேர்வு குறித்தும் பேசியுள்ளார். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா பற்றி தெரிவித்த பிரேமலதா நீட் தேர்வால் தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஐநா கூட்டத்தில் பதிவு செய்துள்ளார்.
ஐநா சென்று நேற்று முன்தினம் நாடு திரும்பிய பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐநாவில் உரையாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக மாணவி பிரேமலதா தெரிவித்துள்ளார். “மனித உரிமைக் கல்வியை எந்த அளவுக்குக் கொண்டுவர இயலுமோ அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன்” என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் மாணவி ஐநாவில் பேசியதற்குக் கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கூலித்தொழிலாளரின் மகளாகப்பிறந்து, உலக நாட்டுப் பிரதிநிதிகளின் மத்தியில் மனித உரிமை கல்வியின் அவசியம் குறித்துப் பேசும் அளவுக்கு பிரேமலதா உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.�,