பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் சேர்த்து கொள்ளாதது ஏன்? என்று விளக்கமளிக்குமாறு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் டெக் மஹிந்திரா நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியது.
இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டு சுமார் 56,000 ஊழியர்களைத் தங்களது நிறுவனத்தில் இருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஐடி துறை மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளது. அமெரிக்கா விசா கட்டுப்பாடு மற்றும் ஐடி நிறுவனங்களின் எதிர்பாராத வீழ்ச்சியினாலும் டெர்மினேஷன் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள டெக் மஹிந்திரா நிறுவனத்தில் பணிபுரிந்த நான்கு ஐடி ஊழியர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் நாங்கள் நான்கு பேரும் சட்டவிரோதமாக தங்கள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யபட்டுள்ளோம் .இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் நலத் துறையில் புகார் அளித்தும் எந்தப் பலனும் இல்லை. வேலையின்றி எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது எனக் கூறியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று ஜூலை-12 ஆம் தேதி ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ராமச்சந்திர ராவ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் சேர்த்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து மூன்று வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் பணிநீக்க நடவடிக்கை சட்டப்படி நிகழ்ந்துள்ளதா? என்பதை ஆராயத் தவறியது ஏன் என்பது குறித்து தெலங்கானா தொழிலாளர் நலத் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு கடந்த ஜூலை-7 ஆம் தேதி மஹிந்திரா குழுமம், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஊழியர்களுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நிறுவனத்தின் கடமை. இதுபோன்று இனி எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.�,