அமைச்சர் எம்.சி. சம்பத்துக்கும், விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வனுக்கும் இடையிலான மோதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை பஞ்சாயத்துக்கு போயிருக்கிறது. இதையடுத்து, அமைச்சர் சம்பத்தை அழைத்துக் கடுமையாக எச்சரித்திருக்கிறார் முதல்வர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டுபட்ட நிலையில் அக்கட்சியின் பல பிரமுகர்களும் தங்கள் மாவட்ட நிலவரத்தின் அடிப்படையிலேயே தினகரன் அணிக்கு சென்றனர். ஓ.பன்னீர் செல்வத்தை தேனி அரசியலில் பிடிக்காமல் தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் பக்கம் வந்தார். கரூரில் விஜயபாஸ்கரை பிடிக்காமல் செந்தில்பாலாஜி தினகரன் பக்கம் வந்தார். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பலர் நிலைப்பாடு மேற்கொண்ட நிலையில், கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் சம்பத்துக்கு எதிராக அரசியல் செய்து வந்த கலைச்செல்வன் தினகரன் அணிக்கு வந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் கேட்டு கலைச்செல்வன் முயற்சித்தபோது, அமைச்சர் சம்பத் பலத்த முயற்சியெடுத்து கலைச்செல்வனுக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுத்தார். ஆனால் அதையும் மீறி சசிகலா தரப்பை பிடித்து எம்.எல்.ஏ. சீட் வாங்கி ஜெயித்தார் கலைச்செல்வன். சென்ற பதவிக் காலத்தில் அமைச்சர் பதவியில் சம்பத் இருந்ததை ஒட்டி, இந்த பதவிக் காலத்தில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கலைச்செல்வன் எதிர்பார்த்தார். ஆனால் அதையும் சம்பத் தொடர்ந்து தடுத்து வந்ததாக கருதிதான் மாவட்ட அளவில் அரசியல் செய்வதற்காக தினகரன் அணிக்குச் சென்றார் கலைச்செல்வன்.
இந்நிலையில் சட்டமன்ற இடைத் தேர்தல், மக்களவைத் தேர்தல்கள் முடிந்த நிலையில் சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன் உள்ளிட்ட மூவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து கலைச்செல்வன் உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் தினகரன் ஆதரவு நிலையில் இருந்து மாறி முதல்வர் எடப்பாடியை சந்தித்து விட்டார் கலைச்செல்வன். ரத்தினசபாபதி மூலம் இரவே தன் வீட்டுக்கு கலைச்செல்வனை அழைத்துப் பேசி அதன் பின்னர் தினகரனை விட்டு வரச் சொன்னார் முதல்வர். ஜுலை 3 ஆம் தேதி முதல்வரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் கலைச்செல்வன்.
இப்படியாக கலைச்செல்வன் மீண்டும் அதிமுகவுக்கே வந்த இரண்டே நாளில், கடலூர் மாவட்டத்தில் வழக்கம்போல அமைச்சர் சம்பத் தரப்பு மூலமாக கலைச்செல்வனுக்கு இடைஞ்சல்கள் பழையபடி ஆரம்பித்துவிட்டன. ஜூலை 5 ஆம் தேதி விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழாவுக்கு சென்றிருந்தார் எம்.எல்.ஏ. கலைச்செல்வன். ஆனால் அமைச்சர் சம்பத் ஆதரவாளரான நகர செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று, ‘அமைச்சர் இல்லாமல் எம்.எல்.ஏ. லேப்டாப் வழங்கக் கூடாது’ என்று தகராறு செய்தனர். இதனால் சில மணி நேரம் காத்திருந்து எம்.எல்.ஏ.கலைச்செல்வன் வேதனையுடன் சென்றுவிட்டார். அமைச்சர் சம்பத் ஆதரவாளர்கள் செய்த தகராறால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அன்றே, ‘இதுகுறித்து நான் முதல்வரிடம் புகார் செய்வேன்’ என்று சொல்லிவிட்டுத்தான் பள்ளியில் இருந்து புறப்பட்டார் கலைச்செல்வன்.
சொன்னது மாதிரியே முதல்வரை சந்தித்த கலைச்செல்வன், “நான் அதிமுகவை விட்டு தினகரன் பக்கம் போனதற்கு காரணமே சம்பத் தான். தொடர்ந்து பல வருடங்களாக அவர் என்னை ஓரங்கட்ட முயற்சித்து வருகிறார் இதுவரைக்கும் தினகரன் அணியில் இருந்தபோது மரியாதையாக இருந்து வந்தேன். ஆனால் இங்கே வந்த இரண்டே நாளில் தன் ஆதரவாளர்களை விட்டு என்னை அவமானப்படுத்துகிறார் அமைச்சர் சம்பத். இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும். உங்கள் பேச்சைக் கேட்டுதான் நான் வந்தேன்’ என்று கூறியிருக்கிறார்.
நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவருக்கு பதில் சொல்லி அனுப்பி வைத்த முதல்வர் எடப்பாடி இது தொடர்பாக அமைச்சர் சம்பத்தை நேரில் கூப்பிட்டு பேசியிருக்கிறார்.
“நான் கஷ்டப்பட்டு ஒவ்வொரு எம்.எல்.ஏ.வாக கூப்பிட்டுப் பேசி நம் ஆட்சிக்கு ஆதரவாக கொண்டுவருவேன். நீங்க உங்க இஷ்டத்துக்கு பிரச்சினை பண்ணி அவங்களை மறுபடியும் வெளிய அனுப்புவீங்களா? உங்க மேல கடலூர் மாவட்டத்துல ஏற்கனவே ஏகப்பட்ட புகார் இருக்கு. இப்ப வந்த கலைச்செல்வன் என் பேச்சைக் கேட்டு என் வார்த்தைகளை நம்பி வந்திருக்காரு. அவரை வந்த உடனே டிஸ்டர்ப் பண்றீங்க. கடலூர் மாவட்ட அதிமுக உங்க வீட்டு சொத்து கிடையாது. வேணும்னா நீங்க அதிமுகவை விட்டு போங்க. என்னாகும்னு பார்த்துடலாம்” என்று கோபத்தில் பொரிந்து தள்ளிவிட்டாராம் எடப்பாடி. அமைச்சர் சம்பத்தும் இதனால் டென்ஷனில் இருக்கிறார்.
**
மேலும் படிக்க
**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
�,”