Yஊழலைக் கட்டுப் படுத்த ஏழு வழிகள்!

Published On:

| By Balaji

-முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.வி. ஆச்சாரியா சிறப்புப் பேட்டி- 3

எஸ். ராஜேந்திரன் -தமிழாக்கம்: பா.சிவராமன்

**தண்டனை வழங்கப்படுவது ஊழல் வழக்குகளில் மிகவும் அரிது என்பது அனைவரும் அறிந்தவிஷயம் .குற்றவாளிகளுக்கு தக்கதண்டனையை உத்திரவாதம் செய்யக்கூடிய வழிமுறைகளை நீங்கள் கூறமுடியுமா?**

நேர்மையான புலனாய்வு அதிகாரியும் நேர்மையான மற்றும் அனுபவமிக்க அரசு வழக்கறிஞரும் கேள்விக்கிடமற்ற நேர்மை வாய்ந்த பாரபட்சமற்ற நீதியரசரும் இருந்தால் மட்டுமே ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் வழக்குக்குள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்படமுடியும். மேல்மட்ட அதிகாரிகளில் அத்தகைய நபர்கள் எத்தனை பேர் உள்ளனர்? ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வந்தர்கள், பலம் பொருந்தியவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள். எனவே இத்தகைய வழக்குகளை கையாளும் மேற்கூறப்பட்ட நபர்கள் நிர்பந்தங்களையும் ஆசைகாட்டல்களையும் புறக்கணிக்க வேண்டும் .

இந்த வழக்குகளில் ஏற்படும் காலதாமதம் குற்றம் சாட்டப்படுபவர்கள் விடுவிக்கப்படுவதற்கு மற்றொரு காரணம். காலதாமதம் சாட்சிகளை வென்றெடுக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு உதவுகிறது.பாதிப்புக்குள்ளானவர் (இவரிடமிருந்து லஞ்சம் கேட்கப்பட்டு பெறப்படுகிறது) சிறிது காலத்துக்குப் பிறகு வெறுத்துப் போய் வழக்கிற்கு எதிராக மாறுகிறார். சில வழக்குகளில் அரசு வழக்கறிஞர்களே லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்றனர். ஒருவழக்கில் ஜாமீன் வழங்க கோடிக்கணக்கான ருபாய் லஞ்சம் பெற்றதாக நீதியரசர் ஒருவரே குற்றச்சாட்டுக்குள்ளானார் .அத்தகைய வழக்குகள் அரிது என்பது உண்மைதான் .பெருமளவில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்கு இவை சில காரணங்கள்.

தண்டனை பெற்றுத் தருவதற்கான சிறந்தவழி நேர்மையான சுதந்திரமான மற்றும் திறம்பட்ட புலனாய்வு நிறுவனம் வழக்காடும் அமைப்பு மற்றும் நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகும். இவை மூன்றும் வெவ்வேறு கட்டங்களில் தீர்க்கமான பாத்திரங்களை வகிக்கின்றன.

**சம்பந்தப்பட்ட சட்டங்களை கறாராக அமல்செய்வது அனைத்து மட்டங்களிலும் ஊழலைக் கட்டுப்படுத்த உதவுமா?**

சொத்துக்களையோ அல்லது சட்ட விரோதமாகப் பெறப்பட்ட பணத்தையோ பறிமுதல் செய்வதற்கு சட்டத்தை கறாராகவும் துரிதமாகவும் அமுல்படுத்துவது ஊழலில் ஈடுபட்டு சொத்துக்களை பெறுவதிலிருந்து ஒருவரை நிச்சயம் தடுக்கும்.

பின் வருவன அனைத்து மட்டங்களிலும் ஊழலைக் கட்டுப்படுத்த உதவக்கூடிய சில நடவடிக்கைகள்:

1. தம் இஷ்டப்படி செயல்படுவதற்கு அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரத்தின் வரம்பைக் குறைப்பது. பொருளாதாயத்துக்கு கைமாற்றாக அதிகாரப்பூர்வமான சலுகைகளை வழங்குவதற்கான வரம்பை இது குறைக்கும்.

2. கட்டுப்பாட்டு வரம்புக்குட்பட்டு கூட தமது இஷ்டப்படி செயல்படுவதற்கு , தக்க வழிகாட்டுதல்களை வகுப்பது , சட்டவிரோதமான ஆதாயத்துக்கு கைம்மாறாக அதிகாரத்தை தாறுமாறாக பயன்படுத்துவதற்கான வரம்பை குறைக்கும்.

3. அடிப்படைத் தேவைகளை போதிய அளவு சப்ளை செய்வது அத்தகைய தேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் வழங்க வேண்டிய தேவையை ஒழிக்கும். எடுத்துக் காட்டாக, சில ஆண்டுகள் முன்பு வரை ஒரு தொலைப்பேசி தொடர்பையோ அல்லது ஒரு சமையல் எரிவாயு தொடர்பையோ பெறுவதற்கு லஞ்சம் வழங்க வேண்டியிருந்தது. இப்போது அவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு இவற்றை பெற்றுக் கொள்ளுமாறு தொந்தரவு செய்கின்றனர்.

4.எந்த துறையிலும் போட்டி நிலவுவது ஊழலில் ஈடுபடுவதைத் தவிர்க்க நுகர்வோருக்கு உதவும்.

5. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற திட்டவட்டமான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இதை மீறுபவர்களுக்கு கடுந்தண்டனை விதிக்கப்படவேண்டும்.

எடுத்துக்கட்டாக, பிறப்புசான்றிதழ், மரணசான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் ஆகியன காலக்கெடுவுக்குள் கொடுக்கப்பட வேண்டும். தவறினால் தண்டனை தொடரும்.

6. பாதிப்புக்குள்ளானவர்கள் இரகசியமாக புகாரளிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அத்தகைய புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது லஞ்சம் கேட்டுப் பெறுவதிலிருந்து அரசு ஊழியரைத் தடுக்கும்.

7.கூடிய வரையில், முடிவெடுப்பதற்கான அதிகாரம், ஒரு தனிநபரிடம் அல்லாமல் ஒரு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

**மத்திய புலனாய்வுத்துறையும் அமலாக்கத்துறையும் கூட அவற்றின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு இன்றி சுயாட்சியுடன் செயல்படுவதை உத்திரவாதம் செய்யவேண்டியதற்கான அவசியம் குறித்த உங்கள் கருத்து என்ன?**

முதலில் மக்களுடைய மதிப்பில் சிபிஐ இன் நம்பகத்தன்மை எவ்வாறு உள்ளது என பார்ப்போம். மிகச் சமீபத்தில், முதல் மற்றும் இரண்டாம்நிலை அதிகாரிகளாக விளங்கும் பொறுப்பிலிருக்கும் சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனர் ஆகியோர் கட்டற்ற உயர்மட்ட ஊழலில் ஈடுபடுவதாக ஒருவருக்கெதிராக ஒருவர் குற்றஞ்சாட்டி FIR கூட பதிவு செய்தனர். (சிபிஐஇல் கூட பொய் புகாரளிப்பதும் பொய் வழக்குகள் போடுவதும் நடக்காத ஒன்று அல்ல என இது காட்டுகிறது).

இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட மூன்றாவது நிலை அதிகாரி உச்சநீதிமன்ற கட்டளைகளுக்கு கட்டுப்பட மறுத்ததால் இழைக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு தண்டனையாக , நீதிமன்றம் அமர்வு முடிந்து எழும்வரை நீதிமன்ற கூடத்தில் ஒரு பெஞ்சின் மீது உட்கார வைக்கப்பட்டார். இறுதியில், இவர்கள் அனைவருமே இந்த இலாக்காவிலிருந்து மாற்றப்பட்டனர் என்பது வேறு கதை.நாட்டின் முதன்மையான புலனாய்வு நிறுவனத்தின் மரியாதை இவ்வாறிருந்தால் இந்நிறுவனம் நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் செயல்படும் என ஒருவர் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும். அமலாக்கத் துறையைப் பொறுத்தவரை அது அரசின் வழிகாட்டுதலில் செயல்படுகிறது.

இத்தகைய நிலைமைகளில், புலனாய்வு நிறுவனங்கள் அரசியல் தலையீடு இல்லாமலும் நிர்வாகத்துறையின் கீழ் இல்லாமலும் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கையில் இந்த நிறுவனங்களில் பதவிகளுக்கு நியமிப்பதற்கும் இவற்றின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கும் ஒரு சுதந்திரமான அதிகார அமைப்பிற்கான தேவையும் உள்ளது. இந்த புலனாய்வு நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பதை நான் ஆதரிக்கவில்லை. அது அரசியல் தலையீட்டை விட மோசமானதாக இருக்கக்கூடும். தங்குதடையற்ற முழுமை அதிகாரத்தை போலீசுக்கோ சிபிஐக்கோ அமலாக்கத் துறைக்கோ வழங்குவது அபாயகரமானது. இது நம்நாட்டில் ஒரு ‘போலீஸ்அரசு’ உருவாவதில் போய் முடியும்.

**சில நீதியரசர்களின் சில முடிவுகளின் தன்மையைப் பார்க்கும் போது நீதித்துறை சுதந்திரமாக உள்ளதா?**

அண்டை நாடுகளைப் போலன்றி நம்நாட்டில் ஜனநாயகம் பிழைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான நீதித்துறை நிலவியதேயாகும் அரசியலமைப்பின் நிறுவனர்கள் குடிமக்களைக் காக்கக்கூடிய சுதந்திரமான நீதித்துறை ஒன்று நிலவவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தனர். அப்படியொரு வலுவான மற்றும் சுதந்திரமான நீதித்துறை உள்ளது என்று நாம் இன்று கூறமுடியுமா? இதற்கு பதில் எதிர்மறையாகத்தான் இருக்கும்.

அரசியல் சட்டம் 1950 இல் நடப்புக்கு வந்தபோது ஓய்வுபெற்ற நீதியரசர்களுக்கு கவர்ச்சிகரமான பதவி எதையும் அளிப்பதற்கான வாய்ப்பு நிர்வாகத்துறைக்கு இருக்கவில்லை. ஆனால் இன்றோ நிலைமை மாறியுள்ளது. இப்போதோ ஓய்வுபெற்ற நீதிபதிகளால் மட்டுமே நிரப்பப் படக்கூடிய ஏராளமான பதவிகள்அரசுத்துறையின் பால் உள்ளன .மற்ற விஷயங்களோடு இதுவும் சேர்ந்து நீதித்துறையின் சுதந்திரத்தை பலவீனப் படுத்தியுள்ளது.

பயங்கரவாதம் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை விட இன்று நாடு எதிர்கொள்ளும் ஆபத்து நீதித்துறை படிப்படியாக பலவீனமடைந்து தனது சுதந்திரத்தை இழந்துவருவதாகும். நிர்வாகத்துறையிடமிருந்தோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ வரும் தாக்குதலிலிருந்து குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டியது நீதித்துறையே. நிர்வாகத்துறை அத்துமீறல்களிலிருந்து குடிமக்களை இப்போது வரை பாதுகாத்து வந்தது நீதித்துறையே.

அவசரநிலையின் போது உச்சநீதிமன்றம் அளித்த கேடுகெட்ட ஜபல்பூர் ADM வழக்கு போன்ற சில விதிவிலக்குகள் இருந்தாலும் நீதித்துறை குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்தை எப்போதுமே பாதுகாத்து வந்தது. ஆனால்இன்று நிலைமை மாறியுள்ளது .தனிநபர் சுதந்திரத்தை காக்க வேண்டிய தனது கடமையிலிருந்து நீதித்துறை தவறிவிட்டது. இதன் விளைவு என்னவென்றால் நிர்வாகத்துறையின் கை ஓங்கியுள்ளது . நீதித்துறை முழுவதுமே முற்றிலும் சுதந்திரமாக உள்ளது எனக் கூற முடியாது. குறைந்தது நீதித்துறையின் ஒரு பகுதியானது முற்றிலும் சுதந்திரமாக இல்லாமல் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் நிர்வாகத் துறையின் செல்வாக்கின் கீழ் உள்ளது என்ற நியாயமான அச்சம் நிலவுகிறது.

இதற்கு ஆதாரம் இல்லாமலில்லை. இந்தத் தோற்றத்தை நீதித்துறைதான் களைய வேண்டும். அவசரநிலையின் போது நீதியரசர் ஹிதாயத்துல்லா, “நமக்கு முன்னோக்கிய பார்வை கொண்ட நீதியரசர்கள்தான் தேவை, எதிர்பார்ப்பு கொண்ட நீதியரசர்கள் அல்ல”, என்று கூறினார். இப்போது சில நீதியரசர்கள் ஏதிர்பார்ப்புடன் இருப்பதாய் நாம் காண்கிறோம். மக்கள் நீதித்துறை மீது குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழப்பார்களேயானால் ஜனநாயகத்தில் மிஞ்சியது எதுவும் இல்லை. நாம் ஒரு கட்சி ஆட்சியை நோக்கியும் இறுதியில் சர்வாதிகாரத்தை நோக்கியும் செல்ல நேரிடும்.

[எஸ்.ராஜேந்திரன், பெங்களூரிலுள்ள திஹிந்து அரசியல் மற்றும் பொதுக் கொள்கை மையத்தில் மூத்த ஆய்வாளர். அவர் முன்பு கர்நாடகத்தில் தி ஹிந்துவின் பிராந்திய ஆசிரியராகவும் அசோசியேட் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். கர்நாடகத்தில் தி ஹிந்துவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நீடித்த அவரது பத்திரிக்கையாளர் பணியில் அம் மாநில வாழ்வின் பன்முகங்களைப் பற்றி பகுப்பாய்வு செய்து ரிப்போர்ட் செய்து வந்துள்ளார். அவர் பெங்களூர் பல்கலைக் கழகத்திலிருந்து உயர்கல்வி பட்டத்தை பெற்றிருக்கிறார். அவரது சேவைகளை அங்கீகரித்து கர்நாடக அரசாங்கம் அம்மாநிலத்தின் மிக உயரிய விருதான ராஜ்யோத்சவா விருதை அவருக்கு அளித்தது. அவரை srajendran.thehindu@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

[பயங்கரவாதத்தைவிட பெரிய ஆபத்து நீதித்துறையின் சுதந்திரம் இழப்பு!](https://minnambalam.com/k/2019/10/05/19)

[சிதம்பரம் வழக்கு: நீதிபதிகள் செய்தது நியாயமா?](https://minnambalam.com/k/2019/10/05/89)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share