வெற்றிகரமாக தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டு, ஆஸ்திரேலியாவை பாராட்டிவிட்டுச் சென்றுவிட்டது இந்திய கிரிக்கெட் அணி. ஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா ஆகியோரின் அதிரடிக்கு பதிலடி கொடுக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து ஏமாற்றங்களையும் ஒருங்கே கொடுத்திருக்கிறது இந்திய அணி.
அதிக ரன்களை சேஸ் செய்யும்போது, உருவாகியிருக்கவேண்டிய பலமான ஓப்பனிங்கை தவானும், ரோஹித்தும் தவறவிட்டனர். ரோஹித் அதிவிரைவாக(331 இன்னிங்ஸ்) 350 சிக்சர்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை மூன்றாவது ஒருநாள் போட்டியில் அடித்த ஒரு சிக்சர் மூலம் பெற்றதும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஓப்பனிங்கில் சொதப்பும்போது, மிடில் ஆர்டரில் ஏற்படும் அழுத்ததைக் குறைக்கவேண்டியது அடுத்ததாகக் களமிறங்கும் வீரர்களின் கையிலேயே இருக்கிறது. ஆனால், இந்த செய்தியை படித்து முடிக்கும் நேரத்துக்குள்ளாக அம்பதி ராயுடுவும் பெவிலியன் செல்ல, ஆட்டம் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரின் பேட்களுக்கு மாறியது.
மற்ற வீரர்களைப் போல இல்லாமல் கோலியின் ஆட்டம் மிக நேர்த்தியாக இருந்தது. முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் கோலி இப்படி விளையாடியது ஆச்சர்யமல்ல என்றாலும், மற்றவர்கள் அவருக்கு பக்கபலமாக இல்லாமல் மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் அளவுக்கு விக்கெட்களை எளிதில் விட்டுக்கொடுத்தது நடந்திருக்கக் கூடாத ஒன்று. விராட் கோலியின் மன வலிமையை, சக வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர வைத்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய பவுலர்கள் கடைசியில் கோலியையும் வீழ்த்தினார்கள். பல முறை விளையாடிருந்தும், அந்த லெக் பிரேக் பந்தினை ஏன் கோலி தவறவிட்டார் என்பதை யோசிக்கும்போதே அவரது மன வலிமை குறைந்துவிட்டதை அறியலாம். அதன்பிறகு ஆட்டம் முடிந்ததும் தான் எவ்வளவு வலிமையாக ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தேன் என்பதை கோலி கீழ்கண்டவாறு விளக்கியிருக்கிறார்.
**“பந்துகளை சரியாக அடிப்பதை வைத்துப் பார்க்கும்போது, இது எனது மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. என்னுடைய கேமை நான் விளையாட வேண்டும் என்பது என் மனதில் தெளிவாக இருந்தது. என்னை இந்தளவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் என் ஆட்டம் தான் எனக்கு முக்கியம். அதைத்தான் நான் மிடில் ஆர்டரிலும் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியதுடன், “அடுத்த போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றங்கள் வெற்றிபெறக்கூடிய விளையாட்டை எப்படி கட்டமைக்க வேண்டும் என்று என் வீரர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் வகையில் இருக்கும்”** என்றும் கூறியிருக்கிறார்.
மேலே குறிப்பிட்டவற்றை சொல்லிவிட்டு கோலி சென்றுவிட, இந்திய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் “அடுத்த இரண்டு போட்டிகளில் தோனிக்கு ஓய்வளிக்கப்படுகிறது. மொஹமத் ஷமி காலில் ஏற்பட்ட காயம் பெரிதாக இல்லையென்றால் அவர் அணியில் இருப்பார். அப்படி இல்லாத நிலையில், புவனேஷ் குமாருக்கு வாய்ப்பளிக்கப்படும்” என்று கூறினார்.
இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை 2019 போட்டிக்கு செல்வதற்கு முன்பு இந்திய அணியின் கடைசி இரண்டு போட்டிகளிலிருந்து தோனியை எடுத்துவிட்டு, ‘வீரர்களுக்கு வெற்றிபெறும் திறமையை வெளிக்காட்டப்போகிறோம்’ என்று கூறுவது மிகவும் மோசமான யோசனை என்று கொந்தளிக்கின்றனர் ரசிகர்கள்.
கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர் போன்ற இளம் வீரர்களும் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில், அனுபவம் மிக்க தோனியை அணியிலிருந்து நீக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று ஒரு தரப்பினர் கேட்க, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இன்னொரு தரப்பினர் கோலிக்கு ஆதரவாக பேசுகின்றனர்.
இரண்டு வாதங்களிலும் நியாயம் இருந்தாலும், தோனி இந்திய மண்ணில் விளையாடும் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய மூன்றாவது ஒருநாள் போட்டி இருந்திருக்கவேண்டாம் என்பதே அவர்களது எண்ணம். 26 ரன்கள் மட்டுமே எடுத்த ஒரு ஆட்டத்தை கடைசி போட்டியாக நினைத்துப் பார்க்கமுடியாத கையறு நிலையில் இருக்கின்றனர் தோனி ரசிகர்கள்.
அதேசமயம், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எதிர்கொள்ளவிருக்கும் வலுவான அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்தத் தொடரில் செய்துபார்க்கும் பரிசோதனை முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கக்கூடியவை என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.
கோலி 123 ரன்கள் எடுத்தும், மொஹமத் ஷமி காயமடைந்து இரண்டு பவுண்டரிகளை விளாசிய பின்னரும் இந்திய அணி தோல்வியடைந்தது சோகமான சம்பவம் தான்.
�,”