கடும் சர்ச்சைகளுக்கு நடுவில், நேற்று (ஜூன் 7) நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்துகொண்டார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. வேறுபட்ட கலாச்சாரங்கள் மட்டுமே இந்தியாவைச் சிறப்பான தேசமாக ஆக்கியிருப்பதாகவும், இந்தியாவின் ஆன்மா பன்முகத்தன்மையில் உள்ளதாகவும், அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்றாமாண்டு பயிற்சி நிறைவு விழா நேற்றிரவு நாக்பூரில் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கினார். இதற்கு முன்னதாக, ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த தொண்டர்கள் நடத்திய அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, தேசியவாதம் மற்றும் நாட்டுப்பற்று பற்றிய தனது புரிதல் பற்றியே உரையாற்றப் போவதாக அறிவித்தார். அதன்பின் பேச்சைத் தொடங்கினார். “தேசியவாதம் என்பது ஒருவரது சொந்த நாட்டின் அடையாளம். அது ஒருவரின் தேசம் மீதான பக்தி. இந்தியாவுக்குப் பல வெற்றியாளர்களும் வணிகர்களும் பல்லாண்டுகளுக்கு முன்பே வருகை தந்துள்ளனர். 1800 ஆண்டுகளுக்கும் மேலாக, இங்குள்ள பல்கலைக்கழகங்களைத் தேடி வெளிநாட்டினர் வந்துள்ளனர். பிரபஞ்சவியலின் வழிவந்துள்ள இந்திய தேசியத்தினால், நாம் அனைவரும் உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறோம். சகிப்புத்தன்மையிலிருந்து பலம் பெற்றுள்ளது இந்தியா. சகிப்புத்தன்மையின்மை என்பது நமது தேசிய அடையாளத்தை நீர்க்கச் செய்கிறது. நாம், நமது வேற்றுமைகளைக் கொண்டாடுகிறோம். மதம் மற்றும் வெறுப்பின் வழியாக இந்தியாவை வரையறுப்பது, நமது இருப்பை மறையச் செய்யும்” என்று இந்தியாவின் வரலாறு மற்றும் பின்னணி பற்றிப் பேசினார்.
தொடர்ந்து பேசிய பிரணாப், “காந்தி சொன்னதுபோல, இந்திய தேசியம் என்பது பிரத்யேகமானதல்ல; அழிக்கக்கூடியதுமல்ல. இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தவர்கள் ஒன்று கூடுவதால் இந்திய தேசியம் உண்டாகுமென்று சொன்னார் பண்டித ஜவஹர்லால் நேரு. நம்மைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது பரிசு அல்ல; புனிதப்பணி. நமது அரசியலமைப்பு என்பது பொறுப்பு. பல பகுதிகளை இந்தியாவோடு இணைத்ததற்காக, சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கு இப்போது நன்றி தெரிவிக்கிறேன். தேசியவாதம் என்பது எல்லா மதங்களின் இணைவு. வேறுபட்ட கலாச்சாரங்கள் மட்டுமே இந்தியாவைச் சிறப்பான தேசமாக்கியுள்ளது. இந்தியாவின் ஆன்மா பன்முகத்தன்மையில் உள்ளது. மதச்சார்பின்மையும் நமது கலப்பான இயல்பும் ஒன்றிணைந்தே, நம்மை இந்தியர்கள் ஆக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
122 மொழிகள், 1,600 பேச்சுவழக்குகள், 7 மதங்கள், மூன்று முக்கிய இனக்குழுக்கள் இருந்தாலும், ஒரே அரசியலமைப்பு மற்றும் இந்தியா எனும் அடையாளத்தின் கீழ் நாம் அனைவரும் இயங்குவதாகக் குறிப்பிட்டார் பிரணாப் முகர்ஜி. நம்மிடையே உள்ள கடினமான பிரச்சினைகள் அனைத்தும் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காஷ்மீர் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் நிகழ்த்தப்படும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்தும், சாதி மற்றும் மதம் தொடர்பான தாக்குதல்கள் குறித்தும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடையே பேசினார் பிரணாப். “கோபம் மற்றும் வன்முறையில் இருந்து விலகி, நாம் அமைதி, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும். நீங்கள் (ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்) எல்லாரும் அமைதிக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பெண்ணோ அல்லது சிறுமியோ காயப்படும்போது, இந்தத் தேசத்தின் ஆன்மா காயப்படுகிறது. மேக்ரோ பொருளாதாரத்தில் முன்னேறிவரும் நாம், உலக மகிழ்ச்சி அட்டவணையில் பின்தங்கி 133ஆவது இடத்தில் இருக்கிறோம்.
நாடாளுமன்றத்தின் ஆறாவது வாயிலில் கவுடில்யரின் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. “மக்களின் மகிழ்ச்சியானது அரசனின் மகிழ்ச்சியைப் பொறுத்துள்ளது. மக்கள் நலமே அரசனின் நலம்” என்ற சொல்லாடலில், அரசியலமைப்புக்கு முன்னரே மக்களை முன்னிலைப்படுத்தியுள்ளார் கவுடில்யர். காந்திஜி சொன்னதுபோல, இந்திய தேசியமானது பிரத்யேகமானதோ, ஆக்கிரமிப்பதோ, அழிக்கக்கூடியதோ அல்ல” என்ற வார்த்தைகளோடு தனது உரையை நிறைவு செய்தார் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம், அபிஷேக் சிங்வி உள்ளிட்டவர்கள் கருத்து கூறியதுபோல, தனது தரப்பு கருத்தை இக்கூட்டத்தில் பதிவு செய்தார் பிரணாப் முகர்ஜி.
இந்த விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பிரணாப் எதிர்கொண்ட எதிர்ப்பு குறித்து தனது கருத்துகளை முன்வைத்தார். “ஆர்எஸ்எஸ் மூன்றாமாண்டு விழாவுக்காக, இந்தியாவிலுள்ள பல்துறை அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால், இந்த முறை எழுந்த விவாதம் அர்த்தமற்றது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் பிரணாப் முகர்ஜியின் ஆளுமை பற்றித் தெரியும்; அவரிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முடியும் என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். பிரணாப் எப்படி அழைக்கப்பட்டார் என்பதோ, அவர் எப்படி இங்கு வந்தார் என்பதோ விவாதத்தின் பேசுபொருளல்ல. அவர் இந்த விழாவில் கலந்துகொண்டது பற்றிப் பல விவாதங்கள் எழுந்தாலும், எங்களிடமிருந்து யாரையும் நாங்கள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்பதே உண்மை. ஆர்எஸ்எஸ் என்பது ஆர்எஸ்எஸ்தான்; பிரணாப் எப்போதும் பிரணாப்தான்” என்று தெரிவித்தார் மோகன் பகவத்.
வேற்றுமையில் ஒற்றுமையெனும் சித்தாந்தத்தில் ஆர்எஸ்எஸ் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், ஒவ்வோர் இந்தியருக்கும் தாய்மண்ணை நேசிக்க உரிமையுள்ளதாகவும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார். ”எல்லாச் சித்தாந்தங்களையும் ஒன்றிணைக்கவே நாங்கள் விரும்புகிறோம். எல்லா நாடுகளையும் விட மேலானதாக இந்தியா உயரவே விரும்புகிறோம். இந்த நாட்டின் குடிமகன்களை, இந்தியாவுக்குத் தகுதியானவர்களாக்கும் பணியில் ஈடுபடுகிறது ஆர்எஸ்எஸ். எந்தச் சித்தாந்தங்களுக்கும் ஆர்எஸ்எஸ் எதிரானதல்ல. மாற்றுச் சித்தாந்தங்களோடு ஒன்றாக வெளிப்படுவதில் எங்களுக்குத் தயக்கம் ஏதுமில்லை. எவராக இருந்தாலும், ஆர்எஸ்எஸ் அலுவலகம் வந்து அவர்களது கருத்தைத் தெரிவிக்கலாம். ஒருமித்த சிந்தனையுள்ளவர்கள் மட்டும் ஆர்எஸ்எஸ்ஸில் சேரலாம்” என்று கூறினார் மோகன் பகவத்.
கடந்த ஒரு வாரக் காலத்துக்கும் மேலாக எழுந்த சர்ச்சைகளுக்கு, நேற்றைய விழா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.�,”