yஅரசு ஊழியர்களின் கடமை: உயர் நீதிமன்றம் யோசனை!

Published On:

| By Balaji

ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அது போன்று கடமையும் முக்கியம் என்று தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 18) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் ஒவ்வொரு ரூபாய் வருமானத்திலும் 71 பைசா அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வட்டிக்காகச் செலவிடப்படுவதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஒவ்வொரு ஊதியக் குழு பரிந்துரையின் போதும் அரசு ஊழியர், அரசு ஊழியர் அல்லாதவர் இடையே இடைவெளி அதிகரிப்பதாகத் தெரிவித்தனர் நீதிபதிகள். அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாகவும், பொறியியல் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் அரசுக் கல்லூரிகளைத் தேடுவதாகவும் நீதிபதிகள் கூறினர். அரசு ஊழியர்கள் மற்றும் நீதிபதிகளின் குழந்தைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென்ற விதியை ஏன் கொண்டுவரக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை ஒதுக்க அரசு பரிசீலிக்கலாமே என்று பரிந்துரை செய்தனர் நீதிபதிகள். “உரிமைகளுக்காகப் போராடும் ஆசிரியர்கள், கடமைகளிலும் கருத்தாய் இருக்க வேண்டும். தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக யூனியன் செயல்படுவதால், நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் தயங்கும் நிலை உள்ளது. யூனியன்கள் தேவையற்ற விவகாரங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஆபத்தானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவில் ஆசிரியர்களை இடமாறுதல் செய்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் குறையும்” என்று தெரிவித்தனர். “போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதியப் பிடித்தத்திற்குப் பதிலாக விடுமுறைக் காலத்தை கழித்துக் கொள்ளலாமே” என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் இடமாறுதலை ரத்து செய்வது குறித்து ஜாக்டோ ஜியோ தரப்பில் இடைமனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share