அதிகாரப்பூர்வமான செய்திகளைப் பார்ப்போரின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக யூட்யூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பொதுவாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் போலி செய்திகள் வைரலாக பரவுவது வழக்கம். வாட்சப், ஃபேஸ்புக், யூட்யூப், இணையதளங்கள் என தேர்தலில் தாக்கம் செலுத்தும் வகையில் போலி செய்திகளை பரப்ப பல டிஜிட்டல் தளங்கள் பயன்படுத்தப்படுவதுவதை கடந்த காலத்தில் பார்த்துள்ளோம். கடந்த மக்களவைத் தேர்தல், அமெரிக்காவின் கடந்த அதிபர் தேர்தல் என முக்கிய தேர்தல்களில் போலி செய்திகளின் பங்கு மிக முக்கியமான பங்கை வகித்துள்ளன. இதையடுத்து போலி செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களையும், முக்கிய இணையதளங்களையும் பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அவ்வகையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் போலி செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்திய அரசும் அறிவுறுத்தி வந்தது.
இதையடுத்து வாட்சப் நிறுவனம் ஃபார்வர்டு மெசேஜ்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. யூட்யூப் நிறுவனமோ அதிகாரப்பூர்வ செய்திகளை மக்களிடையே அதிகளவில் பரப்புவதற்கு சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ சேனல்களில் வெளியாகும் செய்திகளை பார்ப்போரின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக யூட்யூப் நிறுவனத்தின் செய்தித் துறை பிரிவு இயக்குநர் டிம் கட்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிம் கட்ஸ் பேசுகையில், “நீண்டகால அடிப்படையில் செய்திகளை பொறுப்புடன் பரப்புவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். செய்தி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தும், செய்திகள் தொடர்பான அம்சங்களை மேம்படுத்தியும் நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நம்பகத்தன்மையான செய்திகளை ஊக்குவிப்பது, தொழில்நுட்பத்தின் வாயிலாக இதழியலுக்கு ஆதரவளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.�,