போராட்டத்தால் ஒத்திவைக்கப்பட்ட உலகின் பிரபலமான கால்பந்தாட்டம்!

Published On:

| By Balaji

அடுத்த வாரம் பார்சிலோனாவிற்கும் ரியல் மாட்ரிட்டிற்கும் இடையிலான போட்டி கேடலூனியாவில் நடக்கவிருந்த நிலையில், அங்கு நிலவி வரும் அரசியல் அமைதியின்மையைத் தொடர்ந்து டிசம்பர் வரை இப்போட்டி ஒத்திவைக்கப்படும் என்று அறிவிப்பாகியுள்ளது.

ஸ்பெயினில் கேடலான் பிராந்திய சுதந்திரத்துக்காக போராடிய ஒன்பது தலைவர்களை, ஸ்பெயின் சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேற்று(அக்டோபர் 18) பார்சிலோனாவில் பெரும் அணிவகுப்பை நடத்தினர். அணிவகுப்பின் போது நூற்றுக்கணக்கான முகமூடி அணிந்த இளைஞர்கள் பார்சிலோனாவில் போலீசாருடன் மோதினர். போலீசார் பதிலடியாக கண்ணீர் புகைக்குண்டை போராட்டக்காரர்கள் மீது வீசினர். இதனால் நேற்று நடைபெற்ற போராட்டம் போர்களம் போல காட்சியளித்தது.

இந்த மாபெரும் போராட்டத்தில் 5,25,000 பேர் கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். கேடலூனியா பிரிவினைவாதிக‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டில், ஸ்பானிஷ் நீதிம‌ன்ற‌ம் கேடலான் தலைவர்களான ஒன்பது பேருக்கு ப‌ல‌ வருட‌ கால‌ சிறைத்த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கி திங்களன்று தீர்ப்புக் கூறிய‌து. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்ப‌த‌ற்காக‌, கேடலூனியா பிர‌தேச‌ம் முழுவ‌தும் பொது வேலைநிறுத்த‌ம் ந‌டைபெற்ற‌து. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்துகள் முடக்கப்பட்டன.

அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக பார்சிலோனாவில் உள்ள எல் பிராட் விமான நிலையம் செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. பார்சிலோனா சர்வதேச விமான‌ நிலைய‌த்திற்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. திங்கள்கிழமை முதல் கிட்டத்தட்ட 100 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வன்முறை அதிகரித்ததன் விளைவாக கிட்டத்தட்ட 200 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாகக் செய்திகள் கூறுகின்றன.

தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, ஸ்பெயின் ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு (RFEF) நேற்று இவ்வருட கால்பந்தாட்ட சீசனின் முதல் எல் கிளாசிகோ போட்டியை ஒத்திவைக்க முடிவு செய்தது. எல் கிளாசிகோ என்பது ஸ்பானிஷ் கால்பந்து லீக்கில் இரண்டு ஸ்பானிஷ் கால்பந்து கிளப்புகளான பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் இடையிலான கால்பந்து போட்டியாகும். இது உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து போட்டிகளில் ஒன்றாகும்.

அக்டோபர் 26 ஆம் தேதி பார்சிலோனாவிற்கும் ரியல் மாட்ரிட்டுக்கும் போட்டி நடக்கவிருந்தது. ஆனால் அதே நாளில் சுதந்திர சார்பு கட்சியினர் ஒரு பேரணியை கேடலூனியாவில் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

இதனால் ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு (RFEF) அரசாங்க அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், பேரணியின் அதே நேரத்தில் போட்டியை நடத்துவது பாதுகாப்பற்றதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதனால், ஸ்பெயினின் கால்பந்தாட்ட அடையாளமாக கொண்டாடப்படும் ‘எல் கிளாசிகோ’, [நிலவி வரும் பதட்டமான சூழ்நிலைகளையடுத்து](https://www.edtr.ai/1zue) டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share