ஹைட்ரோ கார்பன் திட்டம் இனி தமிழகத்தில் கொண்டுவர வாய்ப்பே இல்லை என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இதற்கான சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது. டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் இனிவரும் காலங்களில் செயல்படுத்துவதாக இருந்தால் அதை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். எனவே, டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக முதல்வருக்குக் கடந்த 8ஆம் தேதி திருவாரூரில் விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ’காவிரி காப்பாளன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 11) வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், “திமுக ஆட்சியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திறந்துவிட்டீர்கள். எங்களது ஆட்சியில் அது மூடப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இனி தமிழகத்தில் கொண்டு வருவதற்கு வாய்ப்பே கிடையாது. முழுமையான சட்டம் இயற்றப்பட்டு டெல்டா பகுதிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வனப்பகுதிகள் அருகே உள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்க, சேதத்தைக் கணக்கிட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
**-கவிபிரியா**�,