நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. டெல்லி, உ.பி. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை சென்ட்ரலில் இந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல இடதுசாரி அமைப்புகள் சார்பில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசுக்கு எதிராகவும், உள் துறை அமைச்சருக்கு எதிராகவும் அதிமுக அரசுக்கு எதிராகவும் அங்குக் கூடிய மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை தள்ளி மாணவர் அமைப்பினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
**கேரளா**
கேரளாவில், அம்மாநில மாணவர் சங்கத்தினர் நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேரூர்கடா சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அந்த வழியாக இஸ்ரோ ஊழியர்கள் வந்த பேருந்துகளை மறித்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் டெல்லியில் ஒரு சில இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்று பிகார், உபி என பல பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்கின்றன.�,”