விமான விபத்து – விரைந்து உதவிய உள்ளூர்வாசிகள் : குவியும் பாராட்டு!

public

கோழிக்கோடு, ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கிய போது உள்ளூர் மக்கள் விரைந்து செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டதாக கோழிக்கோடு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளி இரவு, கோழிக்கோடு விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானம் கடும் மழைக்கு மத்தியில், பயங்கர சத்தத்துடன் இரு துண்டாக உடைந்து நொறுங்கியது. இந்த சத்தம் கேட்டதும், அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புக் குழு வருவதற்கு முன்னரே ஒரு சிலரை மீட்டு, உள்ளூர் மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த, மொஹமட் சஹால் கூறுகையில், விமான விபத்து ஏற்பட்டதும், பயணிகள் தங்களை மீட்க வேண்டும் என்று அலறினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று உதவினோம். ஆம்புலன்ஸ் வருகைக்காக எதிர்பார்க்கவில்லை. அவ்வழியாக வந்த தனியார் வாகனங்களையும், டாக்ஸிகளையும் பிடித்து காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினோம். அதன்பிறகு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக காவல்துறையினருக்கு உதவி செய்தோம்” என்று கூறியுள்ளார்.

“பயணிகளின் உடைமைகள், ரத்த கறை படிந்த ஆடைகள், விமான இருக்கைகள் ஆகியவை சிதறி கிடந்தன. சிறு குழந்தைகள் எல்லாம், இருக்கைகளுக்கு அடியே சிக்கிக் கொண்டு கிடந்தனர். பெரும்பாலான பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஒரு சிலருக்குக் கால் முறிவு ஏற்பட்டிருந்தது. அவர்களைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்சு அருகில் செல்வதற்குள் எங்களது சட்டைகளும் ரத்தத்தில் நனைந்தன” என்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

உள்ளூர் பொது மக்களும், காவல் துறையினரும் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டது,பெரும் உயிரிழப்பைத் தவிர்ப்பதற்கு ஒரு காரணம் என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“பொதுமக்கள் உதவியால் மீட்பு பணிகள் விரைவில் முடிந்தது. அன்றைய தினம் அவர்கள் ரியல் ஹீரோக்களாக செயல்பட்டனர். மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக தங்களது உயிர்களைப் பணயம் வைத்து உடைந்த விமானத்தில் ஏறி மீட்டனர். அதிக உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டனர்” என்று மலப்புரம் ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தின் போது மீட்கப்பட்ட குழந்தைகளை தங்களது குழந்தைகள் போல் உள்ளூர் மக்கள் கவனித்துக் கொண்டனர். குழந்தைகளின் குடும்பத்தினரை அடையாளம் காண பெரும் உதவி செய்தனர் என்று கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 குழந்தைகளும் 2 முதல் 11 வயதுடையவர்கள் ஆவர். இதில் 3 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது பெயர்களையும், பெற்றோர்களின் பெயர்களையும் கூடச் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்கு பாஸ்போர்ட்டும் இல்லை. இதனால் பெற்றோர்களைக் கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது” என்று குழந்தைகள் மருத்துவர் அஜய் கூறியுள்ளார்.

“இவர்களது குடும்பங்களைக் கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமமாக இருந்தது. தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பகிரத் தொடங்கினர். இதையடுத்து 2-3 மணி நேரத்தில், அனைத்து குழந்தைகள் தொடர்பான விவரங்களும் கிடைத்தன. ஆபத்தில் உதவிய உள்ளூர் வாசிகளுக்கு ஹேட்ஸ் ஆஃப்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *