பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் இதுவரையில் 2.6 கோடிக்கும் மேலான விவசாயிகளுக்கு ரூ.5,215 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய மோடி அரசு அறிவித்திருந்தது. மூன்று தவணைகளாக ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இத்தொகை செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 37 நாட்களில் மொத்தம் 2.6 கோடி விவசாயிகளுக்கு ரூ.5,215 கோடி வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற அரசுத் திட்டம் ஒன்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பயனாளிகளுக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தில் 74.71 லட்சம் விவசாயிகளும், ஆந்திரப் பிரதேசத்தில் 32.15 லட்சம் விவசாயிகளும், குஜராத்தில் 25.58 லட்சம் விவசாயிகளும், தெலங்கானாவில் 14.01 லட்சம் விவசாயிகளும், தமிழகத்தில் 14.01 லட்சம் விவசாயிகளும், மகாராஷ்டிராவில் 11.55 லட்சம் விவசாயிகளும் நிதியுதவி பெற்றுள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.�,