xஸ்டெர்லைட்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு!

Published On:

| By Balaji

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மனுத் தாக்கல் செய்தால் தமிழக அரசின் வாதங்களைக் கேட்ட பின் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று (மே 31) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. மக்களின் போராட்டத்தையும் உயிரிழப்புகளையும் தொடர்ந்து ஆலையை மூடுவதாக கடந்த 28ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஸ்டெர்லைட் ஆலை 2ஆவது யூனிட் விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலத்தையும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலையை மூடி சீல் வைத்தார்.

எனினும், தமிழக அரசின் அரசாணை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பதாகவும், இது சட்டத்தின் முன் செல்லாது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கு 29ஆம் தேதி சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டெர்லைட் ஆலையை மூடப் பிறப்பித்த அரசாணை சட்டப்படி செல்லும். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்னரே ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (மே 31) கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், “ ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்ததற்கு எதிராக அதன் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டால், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது” என்று கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 2010ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதையடுத்து, 3 நாட்களில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் புதிய ஆணையை பிறப்பித்தது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share