xஸ்டெர்லைட்: அவசர வழக்காக விசாரிக்க முடியாது!

Published On:

| By Balaji

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாகத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள விசாரணைக் குழுவுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளித்த நீதிபதி ஏ.கே.கோயல், ஸ்டெர்லைட் ஆலையானது நிர்வாகப் பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கினார்.

அதன் பின்பு, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டார் முன்னாள் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வசீப்தார். அவர், அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. “இதுபோன்ற விசாரணைக் குழு அமைக்க தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையில் முறையான ஆய்வு நடத்தியபிறகே, அது மூடப்பட்டுள்ளது. எனவே, தீர்ப்பாயத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை (செப்டம்பர் 5) விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 4) ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share