2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலின்போதே நடிகர் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் இடையேயான போட்டி தொடங்கிவிட்டது. அத்தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. இவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் அடுத்த நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் சரத்குமார் போட்டியிடவில்லை. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது.
போட்டியில் சரத்குமார் இல்லாவிட்டாலும் தேர்தல் பிரச்சாரங்களின்போது சரத்குமார் பற்றி விஷால் பேசியதாக கூறப்படுகிறது. சரத்குமார், ராதாரவி தலைமையை விமர்சிக்கும் விதமாக விஷால் பேசிய வீடியோ அவரது அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலான விஷால் ஃப்லிம் ஃபேக்ட்ரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சரத்குமாரின் பெயரை இழுத்ததற்காக அவரது மகளும், நடிகையுமான வரலட்சுமி விஷாலை கடுமையாக சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “விஷால் தனது தேர்தல் பிரச்சார வீடியோவில் எவ்வளவு கீழே இறங்கியுள்ளார் என்பது எனக்கு அதிர்ச்சியளித்துள்ளது. அவர் மீது இருந்த கொஞ்சம் மரியாதையும் நீங்கிவிட்டது. குற்றத்தை நிரூபிக்காமலேயே எனது தந்தையின் கடந்தகாலத்தை இழுத்துள்ளார் விஷால். எப்போதுமே சட்டம்தான் உயர்வானது என்று விஷால் சொல்கிறார். ஒருவரது தவறு நிரூபிக்கப்படாத வரை அவர் குற்றமற்றவர்தான் என்று அதே சட்டம்தான் சொல்கிறது.
அவர் குற்றவாளியாக இருந்தால் அவருக்கு தண்டனை கிடைத்திருக்கும். இந்த மாதிரி கீழ்த்தரமான வீடியோக்கள் நீங்கள் வளர்ந்த விதத்தையே காட்டுகிறது. நீங்கள் ஒன்றும் புனிதரல்ல. உங்களது பொய்கள் அனைத்தையும் அனைவரும் அறிவர். நீங்கள் ஏதாவது நல்லது செய்திருந்தால் அதைப்பற்றி பேசாமல் தேர்தலில் போட்டியிடாத எனது தந்தையைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?
இவ்வளவு நாள் உங்கள் மீது மரியாதை வைத்து நல்ல நண்பராக இருந்தேன். ஆனால், நீங்களோ உங்களது சாதனைகளை பற்றி பேசாமல் கீழ்த்தரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். திரைக்கு வெளியிலும் நீங்கள் உண்மையான நடிகர் என நான் நினைக்கிறேன். நீங்கள் அடிக்கடி சொல்வது போல உண்மை நிலைக்கும் என நம்புகிறேன். எனது வாக்கை நீங்கள் இழந்துவிட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்](https://minnambalam.com/k/2019/06/13/70)**
�,”