xவிளைநிலங்களில் டாஸ்மாக் கடைகள்: மூட உத்தரவு!

Published On:

| By Balaji

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

டாஸ்மாக் கடை உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுகிறது. இந்த வழியாகச் செல்லும் சாலையைத்தான் மாணவர்களும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அதனால், விவசாய நிலத்தில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை? என விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று(மார்ச் 15)விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துவதைத் தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஏன் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தக் கூடாது என கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.

அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் செயல்படும் 3000 டாஸ்மாக் கடைகளில் தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், 110 கடைகள் விவசாய நிலங்களில் திட்ட அனுமதி பெறாமல் செயல்படுவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக் கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. அதனால் திட்ட அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். கடைகள் மூடியதற்கான அறிக்கையை வரும் 18ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share