மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், நேற்று (மே 19) வாக்கு கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த முடிவுகள் யாவும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் என்றே கூறியுள்ளன. இதுகுறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்தை கூறியுள்ளனர். அவற்றைக் காண்போம்.
**வெங்கையா நாயுடு (துணைக் குடியரசுத் தலைவர்)**
1999ஆம் ஆண்டுமுதல் வாக்கு கணிப்புகள் தவறாகத்தான் இருந்துள்ளன. வாக்குக் கணிப்புகள் சரியான முடிவுகளை சொன்னதில்லை. எல்லோரும் அவர்களது எண்ணங்களைத்தான் வெளிப்படுத்துவார்கள். உண்மையான முடிவை அறிய 23ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். யாராக இருந்தாலும் நாட்டுக்கு திறமையான தலைவரும், நிலையான அரசும் வேண்டும், அவ்வளவுதான்.
**ராகுல் காந்தி**
தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பாக *தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்* ஊடகத்துக்குப் பேட்டியளித்த ராகுல் காந்தி, “நாட்டில் ஆட்சியாளர்களை முடிவு செய்வது மக்கள்தான். மக்கள் என்ன முடிவு செய்துள்ளனர் என்று 23ஆம் தேதிக்குப் பிறகே தெரியும். மக்களின் முடிவு தெரியாமல் யூகத்தின் அடிப்படையில் கருத்துக் கூறுவது சரியாக இருக்காது” என்று கூறியுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள், இவிஎம் இயந்திரங்கள், தேர்தல் அட்டவணை, நமோ டிவி, கேதர்நாத் நாடகம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தேர்தல் ஆணையம் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டது. மோடி மற்றும் அவரது குழுவின் முன்பு தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டது. மரியாதைக்கும், பயத்துக்கும் உரியதாக இருந்த தேர்தல் ஆணையம் இனி அப்படி இருக்கப்போவதில்லை” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
**சசி தரூர்**
வாக்குக் கணிப்புகள் பொய்யானது என்று நான் நம்புகிறேன். கடந்த வாரத்தில் ஆஸ்திரேலியாவில் வெளியான 56 விதமான கருத்துக் கணிப்புகளும் பொய்யானது என்பது நிரூபணமானது. அரசுக்குப் பயந்து இந்தியாவிலும் பல கணிப்பு முடிவுகள் உண்மையை சொல்ல அஞ்சுகின்றன. உண்மையான முடிவுக்கு 23ஆம் தேதி வரை காத்திருப்போம்.
**மம்தா பானர்ஜி**
இந்த வீண் கணிப்புகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆயிரக்கணக்கான இவிஎம்களை மாற்றியமைத்து அந்த முடிவுகளை மக்களை நம்ப வைக்க செய்யும் விளையாட்டு இது. எல்லா எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாகவும், வலிமையாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் இணைந்து போராடுவோம்.
**தமிழக முதல்வர்-எடப்பாடி பழனிசாமி**
தேசிய அளவில் பாஜக ஆட்சியமைக்கும் என்று வாக்கு கணிப்புகள் கூறியிருந்தாலும், தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி மிகக்குறைந்த இடங்களில்தான் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த வாக்கு கணிப்புகளை அதிமுக தரப்பு ஏற்குமா அல்லது நிராகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 20) கருத்து தெரிவிக்கையில், “2016ஆம் வெளிவந்த வாக்குக் கணிப்புகள் பொய்யாகின. எடப்பாடி தொகுதியில் நான் தோல்வியடைவேன் என்று வாக்கு கணிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் சேலம் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்” என்றார்.
மேலும், “ சேலத்தில் 3 இடங்களில்தான் வெற்றிபெறுவோம் என்று கூறினார்கள். ஆனால் 10 இடங்களில் வெற்றிபெற்றோம். இதுதான் கருத்துக் கணிப்பு நிலவரம். அவை கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு. தமிழகத்தில் வெளிவந்துள்ள கருத்துக் கணிப்பு தொடர்பாகவே பேசுகிறேன். ஏனெனில் தமிழகத்தின் நிலவரம் பற்றி மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். நாங்கள் மாநிலக் கட்சி. மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம். சட்டமன்ற இடைத் தேர்தலிலும் 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்” என்றார்.
**திமுக தலைவர், மு.க.ஸ்டாலின்**
ஊடகங்களில் வெளிவந்துள்ள வாக்குக் கணிப்புகள் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதனை நாங்கள் பொருட்படுத்துவதில்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை. இன்னும் 3 நாட்களில் மக்களின் கணிப்பு தெளிவாகத் தெரியப் போகிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
**தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி**
மத்தியில் மாற்றம் வர இருக்கிறது. அந்த மாற்றத்தை மறுதலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள் வாக்குக் கணிப்பு என்ற பெயரில் தவறான ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். என்னுடைய தேர்தல் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். மத்தியில் மோடி இல்லாத அரசாங்கம்தான் ஆட்சியமைக்கும். மோடியால் ஆட்சியமைக்க முடியாது. தமிழகத்தில் 37 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும்.
**மதிமுக பொதுச் செயலாளர், வைகோ**
அகில இந்திய அளவில் காங்கிரஸும், மாநிலக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று நான் யூகிக்கிறேன். 2004ஆம் ஆண்டு கருத்துக் கணிப்பு சொன்னது போல வரவில்லை. சில நேரங்களில் கருத்துக் கணிப்புகள் சொன்னது போல தீர்ப்புகள் வந்துள்ளன. எனவே கருத்துக் கணிப்புகள் குறித்து வேறு எதுவும் கருத்துக்கள் கூறுவதற்கு இல்லை. இன்னும் 2 நாட்கள்தானே உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்.
**டிடிவி தினகரன்**
மோசடி கணிப்புகளைப் புறந்தள்ளி, வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்.
**சந்திரபாபு நாயுடு**
மக்களின் உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்துவதில் வாக்கு கணிப்புகள் தோல்வியடைந்துவிட்டன. கள நிலவரமும், வாக்கு கணிப்புகளும் ஒத்துப்போவதில்லை என்பது பலமுறை நிரூபணமாகியுள்ளது. மத்தியில் பாஜக அல்லாத அரசும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும் மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
**உமர் அப்துல்லா**
ஒவ்வொரு வாக்குக் கணிப்பும் போலியானது. தொலைக்காட்சியை ஆஃப் செய்து வைக்க வேண்டிய நேரம் இது. சமூக வலைதளங்களை லாக் அவுட் செய்து வைக்க வேண்டிய நேரம் இது. 23ஆம் தேதி முடிவுகள் தெரியும்.
**ராகேஷ் திரிபாதி (பாஜக செய்தித் தொடர்பாளர்**
கருத்துக் கணிப்புகளும், வாக்குக் கணிப்புகளும் ஒரே மாதிரியாக உள்ளன. ரஃபேல் விவகாரம் தோல்வியடைந்துவிட்டது என்பதை காங்கிரஸ் இப்போது உணர்ந்திருக்கும். வாக்குக் கணிப்பில் சொல்லப்பட்டதை விட பாஜக கூடுதல் இடங்களை வெல்லும்.
**பிரமோத் திவாரி (காங்கிரஸ்)**
இந்த வாக்கு கணிப்புகள் மோடி அரசை ஊக்குவிக்கும் விதமாகவே உள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் என்ன சொல்லப்பட்டதோ அதையேதான் வாக்குக் கணிப்பிலும் எல்லா நிறுவனங்களும் சொல்லியுள்ளன. இந்தக் கணிப்புகள் எங்கே நடத்தப்பட்டது என்றே தெரியவில்லை. தேர்தலுக்காக நாங்கள் நாடு முழுவதும் விரிவான பயணங்களை மேற்கொண்டோம். கள நிலவரம் வேறாக உள்ளது. கடந்த காலங்களிலும் வாக்குக் கணிப்புகள் தவறாகத்தான் இருந்தன. நாங்கள் முடிவுக்காக காத்திருக்கிறோம்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”