உலகின் ஆளில்லா விமானங்களுக்கான உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் ஆலோசனை தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானங்கள் துறையை மேம்படுத்துவதற்கான ‘மேக் இன் இந்தியா’ கூட்டம் டெல்லியில் ஜூலை 11ஆம் தேதி இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் கலந்துகொண்டு பேசுகையில், “ஆளில்லா விமானங்களுக்கான சந்தையில் சர்வதேசத் தரத்துக்கு வளர்ச்சியடைய வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது. வரும் காலங்களில் உலகின் ஆளில்லா விமானங்களுக்கான உற்பத்திக் கூடாரமாக இந்தியா உருவெடுக்க வேண்டும். அதற்கான சிறந்த தொழில் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் எளிதாகும்.
தற்போது மனிதர்களால் இயக்கப்படும் விமானங்களில் சுமார் 80 சதவிகிதம் அளவு எதிர்காலத்தில் சிறிய ஆளில்லா விமானங்களால் ஆக்கிரமிக்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் ஆளில்லா விமானங்கள் துறையின் மதிப்பு 50 பில்லியன் டாலர் மதிப்பைத் தாண்டும். இந்த வகை விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க அதிக ஊக்கம் தேவை. இந்தியாவில் ஆளில்லா விமானங்களை சிவில் மற்றும் வர்த்தகப் பிரிவில் இயக்குவதற்குச் சரியான விதிமுறைகள் சர்வதேசத் தரத்துக்கு உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.
“இத்துறைக்கான விதிமுறைகள் சரியாக இருந்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆளில்லா விமானங்கள் துறை சிறந்த பங்களிப்பை வழங்கும்” என்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாடா பவர் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான ராகுல் சவுதரி கூறினார்.�,