காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் இரண்டாவது தொகுதியாக கேரளாவின் வயநாட்டில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி பொறுப்பு வகித்து வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலிலும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடவுள்ளார். அமேதியுடன், மற்றொரு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டுமென தென்மாநிலங்களிலிருந்து கோரிக்கை எழுந்தது. ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிட வேண்டுமென கர்நாடக காங்கிரஸும், தமிழகத்தில் போட்டியிட வேண்டுமென தமிழக காங்கிரஸும், கேரளத்தில் போட்டியிட வேண்டுமென கேரள காங்கிரஸும் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஏ.கே.ஆண்டனி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தென்னிந்தியாவில் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டுமென கடந்த சில வாரங்களாக தொடர் கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. முக்கியமாக கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்தே கோரிக்கைகள் எழுந்தன.
தென்மாநிலங்களின் ஒருமித்த கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என நாங்கள் அனைவரும் ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்தோம். பின்னர் வயநாடு தொகுதியில் போட்டியிட அவர் ஒப்புதல் அளித்தார்” என்று தெரிவித்தார். அமேதி தொகுதி ராகுல் காந்திக்கு நம்பிக்கையளிக்காததால் வயநாட்டில் போட்டியிடுகிறாரா எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜெவாலா, “மோடி ஏன் குஜராத்தை விட்டுவிட்டு வாரணாசியில் போட்டியிட்டார். அவருக்கு குஜராத் நம்பிக்கையளிக்கவில்லையா? இதெல்லாம் முதிர்ச்சியற்ற குழந்தைத்தனமான கருத்துகள்” என்று தெரிவித்தார்.�,