Xரெய்டு சேடிஸ்ட் சேட்டை: ஸ்டாலின்

Published On:

| By Balaji

“துரைமுருகன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கு பிரதமர் மோடியின் நேரடி தலையீடே காரணம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு காட்பாடியிலுள்ள துரைமுருகன் இல்லம், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் திடீரென சோதனை நடத்தினர். துரைமுருகன் இல்லத்தில் நடந்த சோதனை முடிந்து, 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும், கல்வி நிறுவனங்களில் சோதனை நடந்துவருகிறது எனவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் வேட்பாளரின் இல்லத்திலேயே நடைபெறும் வருமான வரி சோதனையானது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரி சோதனைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாகத் தலையிட்டு திமுக மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்த உத்தரவிட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம். இந்த ஃபாசிஸ்ட் பாய்ச்சலையும், சேடிஸ்ட் சேட்டையையும் பார்த்து திமுக ஒருக்காலும் ஓய்ந்துவிடாது. மிசாவையே பார்த்து மிரளாத இயக்கம் திமுக. இந்த ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் என்றைக்கும் அஞ்சாது. மத்தியில் உள்ள பாஜக அரசு இப்போது ஒரு காபந்து சர்க்கார். ஆகவே இந்த காபந்து பிரதமரின் அதிகாரத்திற்கு, சுதந்திரமான அமைப்புகள் கைகட்டி வாய் பொத்தி நிற்பது மகா கேவலமான நிலைமை” என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து, தேர்தலில் நேரடியாக திமுகவுடன் மோதத் துணிச்சல் சிறிதும் இல்லாத பாஜக இப்போது முதல்வர் பழனிச்சாமிக்குக் காவலாளியாக நின்று,திரைமறைவில் இருந்து கொண்டு, துரைமுருகன் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டை நடத்தியிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவைக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,

“பண விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக இருந்தால், தேர்தல் காலத்தில் மேற்குறிப்பிட்ட அமைப்புகள் எல்லாம் காபந்து பிரதமரின் தலைமையில் இயங்கத் தடை விதித்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நேரடிப் பார்வையில் செயல்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டிட இந்திய தேர்தல் ஆணையமே ஆராய்ந்து பார்த்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**திருணமூல் காங்கிரஸ் கண்டனம்**

இதுதொடர்பாக திருணமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன் கூறுகையில், “திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேட்பாளராக இருக்கும் நிலையில், அவரது வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது கண்டனத்துக்குரியது. மேற்கு வங்கம், டெல்லி, ஆந்திரா, பிகார், கர்நாடகாவை அடுத்து தமிழகத்திலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்கிறது. மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளை துன்புறுத்திவருகிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

**சோதனை நடந்தது தெரியாது: முதல்வர்**

துரைமுருகன் இல்லத்தில் சோதனை நடந்தது தனக்கு தெரியாது என முதல்வர் கூறியுள்ளார். திருவாரூரில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “துரைமுருகன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். அது தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கை” என்று தெரிவித்தார்.

**பாஜகவுக்கு சம்பந்தமில்லை: இல.கணேசன்**

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், “வருமான வரி சோதனைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. தங்களுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் வருமான வரித் துறை நேரடியாக ரெய்டு நடத்துகிறது. இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை. அப்படி சம்பந்தம் இருக்குமானால் துரைமுருகன் வீட்டை மட்டும் குறிவைத்தா சோதனை நடத்துவார்கள்? ஏனெனில் பாஜகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதே காங்கிரஸ்தான்” என்று விளக்கம் அளித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share