Xராமர் கோயிலை பாஜக மறந்துவிட்டது!

Published On:

| By Balaji

பாலகோட் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பிறகு ராமர் கோயில் விஷயத்தையே பாஜக மறந்துவிட்டதாக தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில் தேர்தல் பிரச்சார முழக்கங்கள் நாடெங்கும் அதிகமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆளும் பாஜக, தனது ஆட்சிப் பெருமைகளைக் கூறி வாக்குகளைச் சேகரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளது. குறிப்பாகச் சென்ற மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அதிரடித் தாக்குதலைத் தனது வாக்குச் சேகரிக்கும் அஸ்திரமாக பாஜக பயன்படுத்தி வருகிறது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவப் படை வீரர்களின் இழப்புக்குப் பழிதீர்க்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாமில் இந்திய ராணுவப் படை நிகழ்த்திய அதிரடித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தனது தேர்தல் பிரச்சாரங்களில் இந்த விவகாரத்தை முன்னிறுத்தியே அதிகமாகப் பேசுகிறது.

இந்நிலையில், ராமர் கோயிலைக் கட்டுவதே தனது முதல் குறிக்கோளாகக் கொண்டிருந்த பாஜக, அதை இப்போது முழுவதுமாக மறந்துவிட்டு பாலகோட் பிரச்சினையை மட்டுமே பெரிதாகப் பேசி வருவதாக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஃபரூக் அப்துல்லா பேசுகையில், “முன்பெல்லாம் ராமர் கோயில்தான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஆனால் இப்போது அது என்னானது? பாலகோட் விஷயம் அதை விழுங்கிவிட்டதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசானது பெரிய பிரச்சினைகளையெல்லாம் திசை திருப்பிவருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “சத்தீஸ்கரில் படை வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களது குடும்பங்களைச் சந்திக்க மோடி சென்றதே இல்லை. ஆனால் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் இறந்தவுடன் அதை மோடி பெரிதாக்கிவிட்டார். பதிலுக்குப் பாகிஸ்தானை மோடி தாக்கினார். அதில் 300 பேர் கொல்லப்பட்டனர். சிலர் 500 பேர் என்கிறார்கள். சிலர் 1,000 என்கிறார்கள். மேலும் பாகிஸ்தான் விமானம் ஒன்றையும் சுட்டு வீழ்த்தி மோடி மிகவும் புத்திசாலி என்று காட்டினார்கள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு நம் நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளையும், வேலைவாய்ப்பின்மையையும் மூடிமறைக்கப் பார்க்கிறார்கள்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share