சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்துப் புகார் அளிக்கத் தனி தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த வேண்டும் என தென்னக ரயில்வே மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ரயில்களில் வழங்கப்படும் போர்வைகளைச் சுத்தப்படுத்தும் பணி தொடர்பான டெண்டரை தங்கள் நிறுவனத்திற்கு ஒதுக்கக் கோரி, பிரீமியர் கார்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கை இன்று (செப்டம்பர் 27) விசாரணை செய்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். அப்போது, டெண்டர் விதிகளை முறையாகப் பின்பற்றாததால் தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்க மறுத்து உத்தரவிட்டார். ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் சுகாதாரம் இல்லாமல் இருப்பது குறித்து, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
பயணிகளின் டிக்கெட் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ரயில்வே உயரதிகாரிகள், ரயில்களைக் குறைந்தபட்சச் சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.
முதல் வகுப்பில் வழங்கப்படும் போர்வைகள் சுத்தமாக இருப்பதில்லை என ஏராளமான புகார்கள் வருவதாகத் தெரிவித்த நீதிபதி, இரவு நேரங்களில் எலி மற்றும் கரப்பான்பூச்சிகளால் பயணிகள் அவதிப்படுவதாகவும், இது தொடர்பான புகார்கள் மீது நெடுங்காலமாக நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டிவருவதாகவும் கருத்து தெரிவித்தார்.
ரயில் மற்றும் ரயில் நிலையங்களை முறையாகப் பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே பொதுமேலாளருக்கு உத்தரவிட்டார் நீதிபதி. சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்துப் புகார் அளிக்கத் தனி தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த தொலைபேசி எண்களை, ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயும், ரயில் நிலைய வளாகத்திலும் இடம்பெறச் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.�,