ரயில்வே பணி நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, 2 வாரத்தில் சிபிஐ பதில் அளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே குரூப் டி மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணையை வெளியிட்டது. அதில், மாநில மொழி கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஓராண்டுக்குப் பின்னர், 2014 நவம்பரில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
“தேர்வுக்குப் பல தமிழர்கள் விண்ணப்பித்தும், சான்றளிப்பவர் கையெழுத்து இல்லை எனக் கூறி, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால், சான்றளிப்பவரின் கையெழுத்து கூட இல்லாத நிலையிலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதேபோல, இந்த ரயில்வே தேர்வில் புகைப்படம் ஒட்டியும், புகைப்படம் ஒட்டாமலும் இரண்டு விதமாகத் தேர்வு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்ட மோசடியும் நடந்துள்ளது” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. வட மாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அதிகாரிகளுக்கு பணம் கைமாற்றப்பட்டுள்ளதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, இன்று (பிப்ரவரி 15) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக சிபிஐ என்ன விசாரணை மேற்கொண்டது என்பது குறித்து 2 வார காலத்தில் பதில் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
�,