மோடியின் ஆட்சியில் விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடனுக்காக ஜப்தி செய்யப்படுவதாகவும், இது மோடி ஆட்சியையே ஜப்தி செய்யும் நேரம் என்றும் ஜோதிமணி கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் போட்டியிடும் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையை எதிர்த்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி போட்டியிடுகிறார். அரசியல் களத்தில் தமிழகம் அறிந்த பிரபலங்களாக இருவரும் இருப்பதால் கரூர் தொகுதி போட்டி மிகுந்த தொகுதியாக உள்ளது. இருவரும் வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று தங்களுக்கு வாக்கு திரட்டி வருகின்றனர். தம்பிதுரைக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜோதிமணியைப் பொறுத்தவரையில் மக்களுடன் இயல்பாகக் கலந்து, அங்குள்ள குழந்தைகளிடம், முதியவர்களிடம் அன்புடன் பேசி வாக்கு சேகரிக்கும் விதம் சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்துக்குட்பட்ட கடம்பன்குறிச்சி, பெரிய வரப்பாளையம், பால்வார்ப்பட்டி மற்றும் விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜோதிமணி இன்று (ஏப்ரல் 2) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விராலிமலையில் ஜோதிமணி பேசுகையில், “நான் நேர்மையாகவும், நம்பிக்கையுடனும் இருப்பதால்தான் கரூர் தொகுதிக்கு என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். நான் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். கல்வியும், வேலைவாய்ப்பும் மிக முக்கியம் என்று எண்ணி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். என்னை நம்பி நீங்கள் வெற்றி பெறச் செய்யலாம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உங்களிடம் நான் வாக்கு கேட்டு வரும்போது என்னுடைய வருமான வரிக்கணக்கில் ஒரு பைசா கூட உயர்ந்திருக்காது என்ற வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்” என்றார்.
ராகுல் காந்தி பிரதமரானால் 24 மணி நேரத்தில் வேளாண் கடன் மற்றும் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்த ஜோதிமணி, “மோடி ஆட்சியில் வேளாண் மற்றும் கல்விக் கடனுக்காக ஜப்தி செய்யப்படுவதைப் பார்க்கிறோம். மோடியை ஆட்சியையே ஜப்தி செய்யும் நேரம் இது. ராகுல் காந்தி பிரதமரானால் நான் தொலைபேசியில் பேசியே பெரிய திட்டங்களைப் பெற்றுத் தருவேன். பிரதமர் கூட எழுந்து வணங்கும் முக்கியப் பொறுப்பான துணை சபாநாயகர் பொறுப்பிலிருந்தும்கூட தம்பிதுரை மக்களுக்கான நல்ல திட்டங்கள் எதையும் செய்யவில்லை. அதனால்தான் பிரச்சாரத்துக்கு வரும் அவரை மக்கள் விரட்டியடிக்கிறார்கள்” என்றார்.
�,”