விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென் இந்திய சினிமாவின் திடீர் கனவு நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா, சமீபத்தில் வெளியான நோட்டா படம் வாயிலாக தமிழிலும் என்ட்ரி கொடுத்தார். அதையடுத்து தற்போது க்ரந்தி மாதவ் இயக்கத்தில் நடித்துவருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, இஸபெல்லா லெயிட் என மூன்று கதாநாயகிகள் இதில் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜேகே ஒளிப்பதிவு செய்கிறார். ‘கிரியேட்டிவ் கமெர்ஷியல் என்டெர்டைன்மென்ட்’ எனும் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.
இந்நிலையில் தான் ஏற்கெனவே நடித்த டாக்ஸிவாலா படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராகுல் சங்க்ரிதியான் இயக்க, ஜிஏ2 மற்றும் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ப்ரியங்கா ஜாவல்கர், மாளவிகா நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
கடந்த மார்ச்சில் இதன் டீசர் வெளியானதால் இவர் நடித்த கீதா கோவிந்தம் வெளியாவதற்கு முன்பாகவே அதாவது கடந்த மே மாதத்திலேயே டாக்ஸிவாலா வெளியாகும் என முன்னர் கூறப்பட்டது. ஆனால் படப் பணிகள் தள்ளிக்கொண்டே சென்றதால் கீதா கோவிந்தம் வெளியாகி, நோட்டா படமும் வெளியாகி தற்போதுதான் டாக்ஸிவாலாவுக்கு காலம் கனிந்திருக்கிறது.
டாக்ஸிவாலாவில், இயக்குநர் ராகுல் சங்க்ரிதியானுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதனால் சில காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படப்பிடிப்பு நடந்ததாலேயே படம் காலதாமதம் ஆகிறது எனக் கூறப்பட்டது. ஆனால் இதை முற்றாக மறுத்த இயக்குநர், சில விஎஃப்எக்ஸ் பணிகளாலேயே படம் தாமதமாவதாக விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டாவுக்கு நல்ல மார்க்கெட் தற்போது இருப்பதால் டாக்ஸிவாலா தீபாவளிக்கு வெளியாகலாம் என சிலர் எதிர்பார்த்துவந்தனர். ஆனால் சமீபத்தில்தானே நோட்டா வந்தது எனக் கருதியதாலோ என்னவோ தீபாவளி ரேஸில் போட்டியிடாமல் தவிர்க்கப்பட்டுள்ளது இந்த டாக்ஸிவாலா!
�,”