மத்திய பாரதிய ஜனதா அரசு நேற்று (26.05.2017) நாடு முழுவதும் சந்தைகளில் இறைச்சிக்கான மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட இடங்களில் இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கேரளாவில் இந்த அறிவிப்புக்குப் பின் இதுவரை 200க்கும் மேற்பட்ட இடங்களில் மாட்டிறைச்சி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கேரளாவில் பிரதான இறைச்சி உணவாக மாட்டிறைச்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நாடு முழுவதும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார் . அதை நேரடியாக அமல்படுத்த முடியாத சூழலில் மத்திய அரசு மறைமுகமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுகுறித்து கடந்த 23ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பசு, எருமை, காளைகள் உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் சட்டவிரோதமாக சந்தைகளில் விற்கப்படுகிறது; இதற்கு புதிய ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்படும் என்று கூறியிருந்தது.
இதனால் கால்நடை வளர்ப்பு, இறைச்சித் தொழில், தோல் ஆலைகள், மருந்துத் தயாரிப்புகள், போக்குவரத்துத்துறை ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் விவசாயிகளுக்கும் இந்த நடவடிக்கை பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடும். நாடு முழுவதும் 6 லட்சம் பேர் கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் கூறுகையில், இந்த நடவடிக்கை கால்நடைகள் விற்பனையை ஒழுங்குபடுத்தும். இதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்தப் புதிய விதிமுறைகளின் படி இனி சந்தைகளில் இறைச்சிக்கான மாடுகளை நாடு முழுவதும் எங்கும் விற்க முடியாது. மீறுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
உள்நாட்டில் ஒருபுறம் பசுவதைத் தடைச் சட்டம், மாடு புனிதம் என்று பேசி வரும் பாரதிய ஜனதா அரசு மாட்டிறைச்சி ஏற்றுமதியை முழு அங்கீகாரத்தோடு அனுமதித்திருக்கிறது. இதுபற்றி அமெரிக்க வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ’கடந்த ஆண்டில் (2016) சர்வதேச அளவில் மாட்டிறைச்சி அதிகம் ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் பிரேசில் மற்றும் இந்தியா 19.60 சதவிகிதத்துடன் முன்னிலையில் உள்ளன. கடந்த ஆண்டில் 11 லட்சம் டன் மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. வணிக மற்றும் தொழில்துறை அமைச்சக மதிப்பீட்டின்படி இதன் மொத்த வருவாய் மதிப்பு 26,000 கோடி ரூபாய்களாகும். தோல் துறை ஏற்றுமதியில் மட்டும் இந்தியா பெற்றுள்ள மொத்த வருவாய் 12 பில்லியன் டாலர்களாகும்.’ மேலும், ’அல் துயா’ என்ற மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சிங் என்பவருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.�,”