Xமனநலக் காப்பகத்தில் வண்ண உடைகள்!

Published On:

| By Balaji

இந்திய மருத்துவ ஆணையமானது மனநலக் காப்பகத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு வண்ண உடைகளை வழங்கலாம் என்று அறிவுறுத்தியது. தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமான பச்சை நிறச் சீருடையை விடுத்து வேறு உடைகளை உடுத்த செய்ததால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உற்சாகமடைந்தனர். வண்ண உடைகளை உடுத்துவதால், அவர்களது மனநிலையில் மாற்றம் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர் மனநல மருத்துவர்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றவர்களுக்குக்கூட, தாங்கள் சீருடை அணிந்தது குறித்த வருத்தங்களே அதிகமிருந்ததாகத் தெரிவிக்கின்றனர். இது குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியொன்றை வெளியிட்டது.

பல மாதங்கள், ஆண்டுகள் மருத்துவமனையில் தொடர்ச்சியாகத் தங்கியிருப்பவர்களுக்கு அவர்களது உறவினர்களே வண்ண ஆடைகள் வழங்கிவிட்டுச் செல்வதாகத் தெரிவித்தார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைமை மருத்துவர் பூர்ண சந்திரிகா. “சீருடை அணிவதால், தாங்கள் நோயாளிகள் என்ற எண்ணமே அவர்களது நலத்தைப் பாதிக்கிறது” என்று கூறினார். அந்த எண்ணத்தை உடைப்பதற்கான முதல் படியே இது என்றார்.

நோயாளிகளின் அடையாளத்துக்காக மட்டுமே பச்சை நிறச் சீருடை ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து யாரும் தப்பிவிடக் கூடாது என்ற எண்ணமும் இதன் பின்னிருந்தது. தற்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் நம்மைப் போலவே கருத வேண்டுமென்ற சிந்தனை பெருகியுள்ளது. இந்த நோக்கிலேயே தற்போது வண்ண உடைகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர் இம்மருத்துவமனை ஊழியர்கள். இதனால், நோயாளிகள் தங்களுடன் பழகும் விதத்தில் மாற்றம் இருப்பதாகக் கூறினர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share