பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் சிறு மீன்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் போன்றவற்றை முதன்முறையாக அமல்படுத்திய பெருமை தமிழ்நாட்டையே சேரும். இதன்பின்னர் நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மதிய உணவில் முட்டை வழங்குவதையும் நாட்டிலேயே தமிழகம்தான் முதன்முதலில் செய்தது. இதன் விளைவாக குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு பெருமளவில் குறைந்திருப்பதை ஆய்வுகள் வாயிலாக அறிகிறோம்.
தற்போது, பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் சிறு மீன்களை வழங்குவதற்கு ஒடிசா மாநிலம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி, மீன்கள் மற்றும் விலங்குகள் வள மேம்பாட்டுத் துறைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து திட்ட மேலாளரான பைஷ்னாப் சரண் ராத் செய்தியாளர்களிடம் பேசினார். “சிறு மீன்கள் விட்டமின் ஏ, கால்சியம், இரும்பு, ஜிங்க் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. குழந்தைகள் மட்டுமல்லாமல், விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களையும் மொகுராலி போன்ற சிறு மீன் வகைகளை உட்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள், முக்கியமாக சேவாஸ்ரமம், உத்கல் பாலாஸ்ரமம், குடியிருப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவில் சிறு மீன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.�,