இயக்குநர் மகேந்திரன் சிறுநீரக பிரச்சினை காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) காலை காலமானார். அவருக்கு வயது 79.
தமிழ்சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய இயக்குநர்கள் தங்கள் படைப்புகள் வாயிலாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அந்தவகையில் 70, 80களில் ஏற்பட்ட மாற்றம் முக்கியமானது. புராணங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துவந்த தமிழ் சினிமாவுக்கு தமிழ் இலக்கியத்தின் மூச்சுக்காற்றை செலுத்தியவர் மகேந்திரன். நான் எதிர்பாராதவிதமாகதான் சினிமாவுக்கு வந்தேன் என்று மகேந்திரன் பல முறை சொல்லியிருந்தாலும் அவர் ஏற்படுத்திய தாக்கம் நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் முக்கியமானது. சிறுகதைகளையும், நாவல்களையும் திரைப்படத்துக்கு கடத்தியதோடு அதன் மூலம் தனக்கான புதிய திரைமொழியை உருவாக்கினார். அது இப்போது திரைக்கு வரும் இயக்குநர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது.
கதை, வசனம் எழுத எம்.ஜி.ஆரால் திரைத்துறைக்கு அழைத்துவரப்பட்ட மகேந்திரன் முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரவிந்த் சாமி நடிப்பில் உருவான சாசனம்.
புகழ்பெற்ற கதைகளை தனது திரைப்படம் மூலம் மற்றொரு புதிய தளத்திற்கு கொண்டு சென்ற மகேந்திரன், பெரும் கவனம் பெறாத கதைகளையும் தனது திரைமொழி மூலம் மிகச் சிறந்த படைப்பாக மாற்றியுள்ளார்.
தனது படங்கள் மூலம் பல்வேறு நடிகர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய மகேந்திரன் சமீபகாலமாக நடிகராகவும் வலம் வந்துகொண்டிருந்தார். தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த அவர் பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். மேலும் விஜய்சேதுபதியுடன் சீதக்காதி படத்தில் நீதிபதி கதாபாத்திரத்திலும் நடித்தார்.
சிறுநீரக பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அவரது உடல் டயாலசிஸ் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனுக்கு திரையுலகம் தனது அஞ்சலியை செலுத்திவருகிறது.�,