பெண்கள் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட மகளிர் விடுதிகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து மகளிர் விடுதிகளையும் ஒழுங்குபடுத்தும் வகையிலும், 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட விதிகளின்படி, மகளிர் விடுதியில் உள்ள அறைகள் 120 சதுர அடி பரப்பு கொண்டிருக்க வேண்டும். ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளை வார்டன்களாக நியமிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதன்மூலம் விடுதிக்கான வாடகை அதிகரிக்கக் கூடும் எனக் கூறி, இந்தச் சட்டத்தை எதிர்த்து தீப்தி உள்ளிட்ட ஏழு பெண்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை இன்று(மார்ச் 30) விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மகளிர் விடுதிகளில் தங்கியுள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டே, மாநில அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு இந்த சட்டத்தை இயற்றியுள்ளதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், மகளிர் விடுதிகளை பதிவு செய்வது, உரிமம் பெறுவது, பாதுகாவலர்கள் நியமிப்பது போன்ற நிபந்தனைகள், விடுதிகளில் தங்கியுள்ள பெண்களின் வாழ்க்கை தரத்தை எந்தவகையிலும் பாதிக்காது எனவும் ஒவ்வொரு விடுதிக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அரசு இயற்றியுள்ள சட்டத்தில் கூறியுள்ள அனைத்து விதிமுறைகளும் அமல்படுத்தப்படும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற மனுதாரர்கள் வாதத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கட்டணத்தை விட, பெண்கள் பாதுகாப்பு முக்கியமானது என கூறினர்.
�,