xபொள்ளாச்சி கொடூரமும் ஊடகங்களின் பொறுப்பும்

Published On:

| By Balaji

சிவா

கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூர சம்பவங்கள் பலவற்றையும் பார்த்துவிட்டு அடங்கிப்போய்க் கிடக்கிறது பொள்ளாச்சி. சாலையில் நிற்கும் ஒவ்வோர் இளைஞனையும் சந்தேகத்துடன் பார்க்கின்ற கண்கள், அருகே யாராவது வந்தால் தானாகப் படபடக்கும் பெண்களின் இதயம், பெண் குழந்தைகளின் கையிலிருந்து பிடுங்கி வீசப்படும் ஸ்மார்ட்போன்கள் என அந்த ஊரின் இயக்கம் சமநிலையிலிருந்து தவறிக் கிடக்கிறது. இந்த பயத்துக்கு அடிப்படை என்ன? காவல் துறையின் அணுகுமுறையில் இதற்கான விடை இருக்கிறது.

**காவல் துறையின் மீறல்கள்**

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபோதே புகார் கொடுத்திருக்கும் பெண்ணின் பெயரை வெளியிட்டது காவல் துறை. ‘இதில் ஆளுங்கட்சிக்குத் தொடர்பு கிடையாது. 100 பெண்கள் என்பது பொய்; நான்கு வீடியோக்கள்தான் கிடைத்திருக்கின்றன’ என்று சொல்வதற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இடத்தில், புகார் கொடுத்த பெண்ணின் அண்ணன் பெயரைப் பொதுவில் கூறியது. பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் ஊரையும் குறிப்பிட்டுச் சொன்னது.

இதுபோன்ற வழக்கைக் கையாளும்போது எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றையும் காவல் துறை காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. சாட்சிகளையே காட்டிக்கொடுக்கக் கூடாது எனும்போது, மேற்கூறிய அனைத்துத் தகவல்களையும் வெளியிட்டிருப்பதை என்னவென்று சொல்வது?

தற்போது புகார் கொடுத்திருக்கும் பெண், கடத்தப்பட்டிருக்கிறார். அப்போது தகாத முறையில் செயல்பட முயற்சி செய்தபோது தப்பி வந்திருக்கிறார். இவைதான் வழக்குகளாகியிருக்கின்றன. அதாவது abduction & molestation என்றே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பாலியல் வண்புணர்வுக்கு முயற்சித்ததும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்குமான ஆதாரமாக விளங்கும் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் பெண்ணிடமிருந்து இதுவரை புகார் கிடைக்கவில்லை. எனவே, abduction & molestation என்ற சாதாரண வழக்காகவே இதனை நடத்தி முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தகவலை வெளியிட்டு மற்றவர்களுக்கு மறைமுக மிரட்டல் விடப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

இவற்றையெல்லாம் கேள்வியாக்கி, தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்கள் பெண்களின் கலாச்சார மாற்றம் குறித்தும், ஆண்களின் தேவைகள் அதிகமாகிவிட்டதா என்றும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன.

தனி ஒரு மனிதனின் இச்சைக்குப் பணிந்து போகவில்லை அந்தப் பெண்கள். ஒரு பெரிய கூட்டத்தின் கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட வேட்டையில் சிக்கியிருக்கிறார்கள். என்ன மாதிரியான திட்டங்கள் இவர்களுக்குக் கைகொடுத்தன என்று பொள்ளாச்சி மண்ணில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த பல சம்பவங்களின் தொகுப்பை இங்கே கொடுக்கிறோம்.

**வலைதளங்களில் விரிக்கப்பட்ட வலை**

ஆண் பிள்ளைகளைக்கூட வெளியே விடாமல் பாதுகாத்துவரும் பெற்றோர்களைத் தாண்டி, குற்றவாளிகளை அறிந்த நண்பர்களிடம் பேசுவது மிக சிரமமாக இருந்தது. அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படாது என்று உறுதிசெய்த பிறகு அவர்கள் கொடுத்த தகவல்கள், அந்தப் பெண்களின் மீது குற்றம் சொல்பவர்களையும் மனமாற்றம் செய்யக்கூடியதாக இருக்கின்றன.

பொள்ளாச்சியில் நடைபெற்ற குற்றச் சம்பவம் கொடூரமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், “அந்தப் பெண்களின் மீதும் தவறு இருக்கிறது தானே?” என ஒரு கேள்வியையும் வீசிவிட்டுச் செல்கின்றனர். எந்தவொரு பெண்ணாக இருந்தாலும், சாலையில் செல்லும் யாரோ ஒருவருடன் சென்றுவிடுவாரா? நம்பிக்கை ஏற்பட வேண்டாமா? தனது பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய இடத்தில் நின்றுதான் அவர்கள் பேசுவார்கள். அப்படிப்பட்ட சூழலில், தனியான ஒரு வீட்டுக்கு எப்படி இவர்களை நம்பிச் சென்றார்கள்? அதற்கு அவர்கள் எப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்தார்கள் என்பதை எல்லாம் விசாரித்ததில் வெளியான உண்மைகளைப் பார்ப்போம்.

பொள்ளாச்சி சம்பவங்களின் அடிப்படையாக சமூக வலைதளம் இருந்திருக்கிறது என்பது உண்மை. அதை எந்த அளவுக்கு விஷமமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியானது. தங்களது நட்புப் பட்டியலில் சேர்க்கும் பெண்களின் அன்றாடச் செயல்பாடுகளைக் கவனித்து வந்திருக்கிறார்கள். ஆன்லைனில் மட்டுமே முடிந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு, பொள்ளாச்சி பகுதியிலிருக்கும் எந்தப் பெண்ணை ஃபேஸ்புக்கில் சேர்த்துக்கொண்டாலும், உடனடியாக அந்தப் பெண்ணின் படத்தைக் கொடுத்து மற்றவர்களிடம் முகவரியைத் தேடச் சொல்லியிருக்கின்றனர் (இந்த வேலையைச் செய்தவர்களைத்தான் ‘அல்லக்கைகள்’ என முத்திரை குத்தி ஜாமீனில் விடுவித்திருக்கிறார்கள்). சரியான முகவரியுடன் வருபவர்களுக்கு, மது, பணம், பெண்களின் மொபைல் எண் எனச் சன்மானம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் சமூக வலைதளங்களில், தங்களுக்குப் பிடித்ததாக லைக் செய்து வைக்கும் பக்கங்களைப் பார்த்து, அதில் எந்த உடை அல்லது பொருளுக்கு அந்த பெண் லைக் அல்லது ஹார்ட்டின் எமோஷன் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, அவர்களுக்கு அந்தப் பொருளை வாங்கி அனுப்பியிருக்கின்றனர். தங்களுக்குப் பிடித்த பொருள் எப்படி வீட்டுக்கு வந்ததென அதிசயிக்கும் பெண்களிடம், “உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியாதா?” என்று மெல்ல நெருங்கியிருக்கின்றனர். பிஞ்சுக் குழந்தைக்குச் சீறும் பாம்பும் விளையாட்டுப் பொருள்தான் என்பது போல, இவர்களின் கயமைக் குணம் அறியாமல் பிடித்ததை லைக் செய்வதும், அதைக் குற்றவாளிகள் வாங்கிக் கொடுப்பதுமென நகர்ந்திருக்கிறது காலம்.

தேவையான அளவுக்கு நம்பிக்கையை வளர்த்த பிறகு (கிட்டத்தட்ட திருமணம் வரை பேசிய பிறகு) நண்பனின் வீட்டுக்குச் செல்லலாம் என அழைத்துச் செல்கிறார்கள். பொது இடங்களுக்கு எங்காவது போகலாம் என்று கூறும் பெண்களிடம், நான் ஒரு பெண்ணுடன் வெளியில் செல்வது தெரிந்தாலே என் வீட்டில் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று வேஷம் போட்டு நம்ப வைத்திருக்கிறார்கள். இந்த நாடகம், ஊருக்கு வெளியே வாங்கியிருந்த வீட்டுக்குள் செல்லும்வரை அரங்கேறுகிறது.

எந்தச் சமயத்திலும் சந்தேகம் வந்து ஏடாகூடம் ஆகிவிடக் கூடாது, தனி வீட்டைப் பார்த்து அந்தப் பெண் மிரட்சியடைந்துவிடக் கூடாது என்பதால் வீட்டு வேலைக்காரர்களை நண்பனின் பெற்றோர் என்று சொல்லி வாசலிலேயே அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். (இவர்கள் மொத்தக் குற்றத்துக்கும் சாட்சியாக இருக்கக்கூடியவர்கள். ஆனால், காவல் துறை இதுவரை இவர்களைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரவில்லை.)

உள்ளே சென்று சில மணி நேரங்கள் ஆன பிறகுதான் இவர்களது வேட்டை தொடங்குகிறது. நண்பனின் அம்மா வெளியே சென்றுவிட்டார்கள் என நெருங்கும் மிருகத்தின் அவசரத்தை ரசிக்கத் தொடங்கும் பெண்கள், சில நிமிடங்களிலேயே மற்ற மிருகங்கள் வருவதைப் பார்த்துக் கலவரமடைகிறார்கள். முதல் மிருகத்தை நம்பிக்கையின் அடிப்படையில் நெருங்கவிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவின் மூலமும், அதற்கும் மசியவில்லை என்றால் பிரம்பு, பைப், பெல்ட் போன்றவற்றாலும், இந்த எதிர்ப்பு அடக்கப்பட்டிருக்கிறது.

அதன் பின் முழு வீடியோவையும் அங்கேயே பார்க்க வைத்து, “இதைப் பற்றி வெளியே சொன்னால் மொத்தமும் ரிலீஸாகிவிடும்” என்று மிரட்டி, நடைப்பிணமாக அனுப்பி வைத்திருக்கின்றனர். கை, கழுத்திலிருக்கும் தங்கம், பணம் ஸ்மார்ட்போன் என அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு அனுப்பியிருக்கிறார்கள். இப்படிச் சிக்கியவர்களில் பணக்காரப் பெண்களை ஒரு விதமாகவும் ஏழைப் பெண்களை வேறொரு விதமாகவும் வீடியோவை வைத்து மிரட்டிப் பணம் சம்பாதித்திருக்கிறது இந்தக் கும்பல். இதுவொரு வகை என்றால், தனியாகச் சந்திக்கும் பெண்களை வீடியோ எடுத்து, அதை சத்தமில்லாமல் மற்றவர்களுக்கு அனுப்பிவிட, அதை வைத்து மிரட்டி அடுத்தவர் அந்தப் பெண்ணை கபளீகரம் செய்வது என தொடர்ந்திருக்கிறது. கல்லூரி மாணவிகள் என இவர்களால் பாதிக்கப்பட்டவர்களை வகைமைப்படுத்திவிட முடியாது. வட்டிக்கு விடும் தொழில் செய்துவந்த திருநாவுக்கரசு, வட்டிக்குப் பணம் வாங்கவும் கொடுக்கவும் செல்லும் பணக்கார வீடுகளில் இருக்கும் மத்திய வயது பெண்களையும் தனது வலைக்குள் கொண்டுவந்திருக்கிறார்.

பொள்ளாச்சியில் இருக்கும் நபர்கள் அறிந்தவரையில் திருநாவுக்கரசை விட ஆபத்தானவர் ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன்தான் என்கின்றனர். ஆனால், ஒருவர் தவறாமல் பெண்களைச் சீரான இடைவெளியில் தங்களது வெறிக்கு ஆளாக்கியிருக்கின்றனர். காவல் துறையிடம் கிடைத்திருக்கும் நான்கு வீடியோக்களில், இரண்டு வீடியோ ரிஷ்வந்த் இடம்பெற்றிருக்கும் வீடியோ தான் என்று அவர்கள் கூறுகின்றனர். அதேசமயம், யாருக்குமே தெரியாமல் இத்தனை வருடங்களாக இப்படிப்பட்ட குற்றங்கள் நடைபெற்றதா என்ற கேள்வியை முன்வைத்தபோது தலையைக் குனிந்துகொண்டனர்.

பாலியல் குற்ற வழக்கில் கைதானவர்கள் மற்றும் ஜாமீனில் வெளிவந்தவர்கள் உட்பட அனைவரும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டுவருவதைப் பலரும் அறிந்தே இருக்கின்றனர். ஆனால், பாதிக்கப்படுபவர்கள் அனைவரும் ஊருடன் தொடர்பில்லாத, புதிதாய் வந்த குடும்பங்கள் என்பதாலும், திருநாவுக்கரசு நடத்தும் வட்டித் தொழிலின் தேவை இருப்பதாலும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். ஆனால், அந்த அம்பு தங்கள் பக்கமே பாய்ந்தபோது தாங்கமுடியாமல் ஆவேசப்பட்டு களத்தில் இறங்கியிருக்கின்றனர். இனி யாரும் எங்கள் ஊரில் இப்படி செய்யமுடியாது என்பதிலும் உறுதியாகவே இருக்கின்றனர்.

**எப்படி ஏமாந்தார்கள்?**

பாதிக்கப்பட்ட பெண்கள் பொருளின் மீதுள்ள ஆசையால் இவர்களுடன் பழகவில்லை. தனக்கு எது பிடிக்கிறதென யோசித்துச் செய்யும் ஒருவன் கிடைத்திருக்கிறான் என்ற நப்பாசையில் பழகியிருக்கின்றனர்.

உடல் சுகத்துக்காகச் செல்லவில்லை. ‘என்னோடு வா வீடு வரைக்கும்; என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்’ என ஒரு குடும்பத்தை அறிமுகப்படுத்தி திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் என்ற கௌரவமான நிலையைக் கொடுக்கப்போகிறான் என நம்பிச் சென்றவளை, பெற்றோர் என யாரோ ஒருவரைக் காட்டி நம்ப வைத்திருக்கிறார்கள். அவளுடைய பலவீனமான தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவளிடம் அத்துமீறியிருக்கிறார்கள். அதைப் படம் எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து வேட்டையாடியிருக்கிறார்கள். இப்படித்தான் பல பெண்கள் இந்த வலையில் சிக்கியிருக்கிறார்கள்.

பெயரைக் கண்டுபிடிப்பதிலிருந்து, முகவரி முதல் பிடித்தது பிடிக்காததைக் கண்டுபிடிப்பது எனப் பெரிய நெட்வொர்க்கை வைத்து வேலை செய்திருக்கும் இவர்களைச் சமாளிக்கும் அளவுக்குத் தமிழகத்திலுள்ள இளவட்டங்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறதா? அதற்கு இந்தச் சமூகமும் அரசாங்கமும் எந்த ஏற்பாட்டையாவது வைத்திருக்கின்றனவா?

குற்றவாளிகள் இந்த அளவுக்கு யோசிக்கும்போது, அதை எதிர்கொள்ள அரசும், குடிமக்களும் தங்களது தரப்பை வலுப்படுத்த ஏதாவது முயற்சி செய்யப்பட்டிருக்கிறதா? அதற்குத் தேவையான அழுத்தத்தை ஊடகங்கள் அரசுக்குக் கொடுத்திருக்கின்றனவா?

இப்போதும்கூட, இந்தக் குற்றத்தை யாரும் கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளிகளின் தவறுதான் அவர்களைக் காட்டிக்கொடுத்திருக்கிறது. தொடர் வெற்றிகளினால் ஏற்பட்ட மமதையும், “உங்களுக்கு நாங்க இருக்கோம்” என்ற அரசியல்வாதிகளின் ஆசியும், காரில் பெண்ணை ஏற்றியதுமே சீண்டலில் ஈடுபட வைத்திருக்கின்றன. அதனால் திடுக்கிட்டு, குடியிருப்புப் பகுதிகளைக் கார் தாண்டுவதற்குள்ளாகக் கூச்சலிட்டுத் தப்பித்து ஓடி வந்த ஒரு பெண்ணை, அவருக்குத் தெரிந்தவர்கள் சிலர் பார்க்கவில்லை என்றால், இந்தக் குற்றங்கள் எதுவும் வெளிவந்திருக்காது.

மறைக்க வேண்டிய பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும், வழக்கு கொடுத்த அப்பெண்ணின் உறவினர் பெயரையும் காவல் துறை அதிகாரியே வெளிப்படையாகச் சொல்கிறார். ‘நாகராஜ் என்ற ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபருக்கும் பாலியல் குற்றத்துக்கும் தொடர்பே இல்லை’ என்று ஒரு காவல் அதிகாரி ஆணித்தரமாக முன்வைக்கும் தகவல், முற்றிலும் தவறு என்பதை அடுத்த நாளே வீடியோ ரிலீஸ் செய்து நிரூபிக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். இதைக்கண்டு கொதித்தெழும் மக்கள், பொள்ளாச்சியின் அதிமுக அம்மா பேரவை செயலாளர் நாகராஜின் மதுபானக் கடையை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

வழக்கு தொடுத்தவர்கள் யார் என்ற ரிப்போர்ட்டை காவல் துறை வெளியிட, முகம் மறைக்கப்படாத வீடியோவைப் பத்திரிகை நிறுவனங்கள் வெளியிடுகின்றன. மேலும், பல புகார்கள் இருந்தால் நீதியைப் போராடிப் பெற்றுவிடலாம். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கச் செய்யலாம். அப்போதும், இந்தக் குற்றவாளிகளுக்குப் பின்பலமாகச் செயல்பட்ட நிழல் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்களா என்பது சந்தேகமே.

சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கும் வழக்கு எப்படிச் செல்லப்போகிறது என்பதைப் பொறுத்தே, இந்த சமூகம் அவர்களுக்கு உதவப்போகிறதா, எள்ளி நகையாடப் போகிறதா என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும்.

எல்லாம் முடிந்து இந்த துர்க்கனவிலிருந்து வெளியே வரும் பெண்கள் உடலையும், ‘கற்பு’ என்னும் கற்பிதத்தையும் அடிப்படையாக வைத்து முன்வைக்கப்படும் விமர்சனங்களைத்தான் எதிர்கொள்ளப்போகிறார்கள். பொதுச் சமூகத்தின் இந்த அணுகுமுறை மாறாதவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையப்போவதில்லை.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share