நடிகர் ரஜினிகாந்துடன் பிரபலங்கள் பலர் நடித்துவரும் ‘பேட்ட’ திரைப்படத்தில் மேலும் ஓர் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பு உ.பி. மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ஏற்கெனவே விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். தற்போது இவர்களுடன் நடிகரும், இயக்குநருமான சசிக்குமார் இணைந்துள்ளார். ரஜினியுடன் நடிப்பதும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதும் சசிக்குமாருக்கு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, இப்படத்தில் ரஜினியுடன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்த மணிகண்ட ஆச்சாரி, ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,“ரஜினி சாருடன் நடித்த அனுபவத்தில் அவரிடம் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட விஷயங்கள் மனிதநேயமும் நேரந்தவறாமையும் தான். அதுமட்டுமல்ல, இயக்குநரிடம் சந்தேகங்களைக் கேட்டு அவர் சொல்லும் ஆலோசனைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார். ரஜினி ஒரு மிகப்பெரிய புத்தகம். என்னால் முழு புத்தகத்தையும் படிக்கமுடியாது. இப்போதும் இருபது வயது இளைஞனின் சுறுசுறுப்போடுதான் இருக்கிறார் ரஜினி. அவருடன் நடித்ததற்காகப் பெருமைப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார் மணிகண்ட ஆச்சாரி.
மணிகண்ட ஆச்சாரி மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகிப் பாராட்டு பெற்ற ‘கம்மட்டிப்பாடம்’ படத்தில் அறிமுகமானவர்.
�,”