திமுக கூட்டணியில் தான் கேட்ட கள்ளக்குறிச்சி தொகுதி கிடைக்காத காரணத்தால் அதிருப்தியில் இருந்த இந்திய ஜனநாயகக் கட்சி, தற்போது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட சம்மதித்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.
திமுக கூட்டணியில் இணைந்த ஐஜேகே கட்சிக்கு அதன் தலைவர் பாரிவேந்தரின் வேண்டுகோளின்படி முதலில் கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்குவதாக திமுக தலைமை உறுதி தந்தது. ஆனால் முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகன் கௌதக சிகாமணிக்காக போராடி கள்ளக்குறிச்சி தொகுதியை உதயநிதி ஸ்டாலின் சிபாரிசின் மூலம்பெற்றுவிட்டார்.
இதையடுத்து,’நீங்கள் பெரம்பலூரில் நில்லுங்கள்’ என்று பாரிவேந்தரிடம் சொன்னார் ஸ்டாலின். ஆனால் அதற்கு பாரிவேந்தர் தயங்கவே, ‘நிற்பதென்றால் பெரம்பலூரில் நில்லுங்கள். இல்லையென்றால் கூட்டணியே வேண்டாம்’ என்ற அளவுக்கு திமுக தலைமையிடம் இருந்து வார்த்தைகள் வந்திருக்கின்றன.
இந்நிலையில் கட்சியில் ஆலோசித்த பாரிவேந்தர் இப்போது பெரம்பலூரில் போட்டியிட சம்மதித்து இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து பேசியிருக்கிறார். ஏற்கனவே 2014 நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூரில்தான் போட்டியிட்டார் அவர். அதன் அடிப்படையில் முதல் கட்ட வேலைகளை பெரம்பலூரில் தொடங்கிவிட்டார். வேட்பாளராக களமிறங்கப் போவது பாரிவேந்தரா, அவரது மகன் ரவியா என்பதை அக்கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை.
�,